Save Soil : தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் தென்னிந்திய தென்னை திருவிழா என்ற நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வருகின்ற ஜனவரி 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அப்போது பேசிய அவர், "தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு. டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது.


இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த தென்னிந்திய தென்னை திருவிழா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் ’இயற்கை சந்தையில்’ 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் பயிற்சி பெற விவசாயிகளுக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


இதையடுத்து பேசிய விவசாயி வள்ளுவன், “தென்னை விவசாயம் லாபகரமாக இல்லாமல் இருந்தது. ஈசா மண் காப்போம் இயக்கத்தினால் தென்னை உடன் பல வகை மரங்கள் வைத்து வளர்த்தேன். தற்போது விவசாயம் லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. நீர் தேவை குறைந்துள்ளது. களை குறைந்துள்ளது. நோய் தாக்குதல் இல்லை. தென்னை திருவிழா எல்லா விவசாயிகளுக்கும் பயனளிக்கும். பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகள் கற்றுக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.