தமிழ் சினிமாவின் மிகவும் வித்தியாசமான ஒரு இயக்குநராக விளங்கும் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்த அஞ்சனாவின் இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான 'வெப்பம்' திரைப்படம் இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்து இருந்தார். 



வழக்கமான அண்டர் கிரவுண்ட் சப்ஜெக்ட் கதையுடன்  செண்டிமெண்ட், காதல், ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான படம். நடிகர் நானி, நித்யா மேனன், பிந்து மாதவி, கார்த்திக் குமார், முத்துக்குமார், ஜெனிபர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நானியும், பிந்து மாதவியும் ஏற்கனவே தெலுங்கு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் அறிமுகமான படம் வெப்பம். நித்யா மேனனுக்கும் இப்படம் தான் முதல் தமிழ் படம் என்றாலும் இப்படம் வெளியாக சற்று காலதாமதம் ஏற்பட்டதால் அதற்கு முன்னர் வெளியான '180' படம் அறிமுக படமானது.  அப்பா - மகன்கள் இடையே மோதல், நல்ல நட்பு, அண்ணன் தம்பி பாசம் இப்படி ஒரு தனி ட்ராக்கில் படம் பயணிக்க அதில் திகட்டும் அளவுக்கு காதல் திணிக்கப்பட்டு இருந்தது. 


படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் படம் முழுக்க ரசிகர்களை ஆக்கிரமித்தது நித்யா மேனன், நானி, கார்த்திக் குமார், பிந்து மாதவி ஜோடிகளே. விளிம்புநிலை இளைஞர்களின் கதாபாத்திரங்களில் அவர்கள் சரியாக ஒட்டவில்லை என்றாலும் தன்னுடைய நடிப்பை முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தினர். பாலியல் தொழில் செய்யும் பெண் கதாபாத்திரமாக பிந்து மாதவி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான படம். 



போதை மருந்து கடத்தல், பெண் தாதா, வன்முறை இவை எல்லாம் தமிழ் சினிமாவில் பழகிப்போன ஒரு விஷயம் என்றாலும் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் மிகவும் அற்புதமாக அமைந்து இருந்தன.


அதற்கு மேலும் அழகு சேர்த்து இருந்தது ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு. 'மழை வரும் பனித்துளி...' என்ற பாடல் காதுகளுக்கு இதம் சேர்த்த சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது. இப்படி படத்திற்கு பல பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 'பஞ்ச்' ஃபேக்டர் சற்று மிஸ்ஸிங் என்பதால் படம் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போனது. ஓரளவுக்கு படம் ஓடினாலும் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை சந்தித்தது.