தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படம் ' தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தி கோட்'. ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


 



பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், வைபவ், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று மில்லியன்கணக்கான வியூஸ் பெற்று சாதனை படைத்தது. அதிலும் விஜயின் டி ஏஜிங் காட்சிகள் கொண்டு இருந்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது. இது தவிர பல படங்களுக்கு பிறகு விஜயின் கம்ப்ளீட் ஆக்ஷன் மூவி, டி ஏஜிங் காட்சிகள்,  AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பு, மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் என பல ஸ்பெஷல் அம்சங்கள் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இதுவரையில் 'தி கோட்' படத்தின் நான்கு பாடங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் வழக்கமாக நடிகர் விஜய் பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பும் ஹேப்பும் இந்த பாடல்களுக்கு பெரிய அளவில் கிடைக்கவில்லை. இருப்பினும் படம் குறித்த அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் உற்சாகத்தை பெருகி வருகிறது.


நெபோட்டிசம் என்பது திரையுலகில் காலம்காலமாக சர்வ சாதாரணமாக இருக்கும் ஒன்றுதான். வாரிசு நடிகர்கள் என்றால் ஓப்பனிங் எளிதாக கிடைத்துவிடும் என்ற கருத்து உண்மைதான் என்றாலும் முதல் வாய்ப்பு மட்டுமே சத்தியம். அடுத்தடுத்த வாய்ப்புகள் அமைய வேண்டும் என்றால் அதற்கு திறமை மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் ரசிகர் ஒருவர் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் எக்ஸ் தளம் மூலம் சாட் செய்து வருகிறார். "எஸ்.ஏ.சி பையன், தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க, கல்பாத்தி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும்  #தி கோட்" என பதிவிட்டு இருந்தார். 






அதற்கு மிகவும் ஜாலியாக பதிலளித்து இருந்தார் வெங்கட் பிரபு. "தேங்க்ஸ் ப்ரோ. உங்க அப்பா பெயரையும் சொல்லுங்க அவருக்கும் நன்றி சொல்லிடுறேன்" என ரிப்ளை செய்து இருந்தார். 


அதற்கு மீண்டும் அந்த ரசிகர் "தேவைப்படாது ப்ரோ... நான் நெபோட்டிசம் ப்ராடக்ட் இல்ல !!!" என பதிலளித்துள்ளார். 
இந்த கான்வர்சேஷன் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.