கல்கி
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான படம் கல்கி. அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , துல்கர் சல்மான் , பசுபதி , அனா பென் , மிருணால் தாக்கூர் , ராஜமெளலி , விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வைஜயந்தி மூவீஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
மகாபாரத கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவான இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. பிரபாஸ் நடித்த முந்தைய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியடைந்த நிலையில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் கல்கி படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் 1000 கோடி வசூல் ஈட்டியது. இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய ஒரே படம் கல்கி என்பது குறிப்பிடத்தக்கது.
கதை ரீதியாக மட்டுமில்லாமல் தொழில்நுட்ப ரீதியாக இந்திய சினிமாவில் மிகப்பெரிய மைல்கல்லை கல்கி படம் எட்டியுள்ளது. முழுக்க முழுக்க கற்பனையான உலகத்தை உருவாக்கி அதை தொழில் நுட்பத் தேர்ச்சியோடு படம் கையாண்டதற்காக இயக்குநர் நாக் அஸ்வின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் சேர்த்து நாக் அஸ்வினை பலர் ஒப்பிட்டு பேசியும் வருகிறார்கள்.
கல்கி 2
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்துள்ளார்கள். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் ஈடுபட்டுள்ளார். திரைக்கதை பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் 3 ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2028 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முந்தைய பாகத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் கதாபாத்திரம் குறைவாகவே இடம்பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க கமல் முக்கிய வில்லனாக நடிக்க இருக்கிறார். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகமளித்துள்ளது.