நடிகர் பிரேம்ஜி அமரனின் பழைய நேர்காணல் ஒன்று வைரலாகி வரும் நிலையில், தளபதி 68 படத்தில் அவர் நடிக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைக்கும் விஜய் 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ படம் உருவாகியுள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 


இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  பிகில் படத்தை தொடந்து இரண்டாவது முறையாக ஏஜிஎஸ் நிறுவனம் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட்பிரபு விஜயுடன் கூட்டணி சேர்கிறார். இதனால் ரசிகர்கள் நீண்ட கால ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது. விஜய் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது ரசிகர்களின் பெரு மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.


இந்த படத்தில் விஜய் 3 விதமாக கேரக்டரில்நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் முதலில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்கப்பட்டு, அவர் மறுத்ததாக தகவல் வெளியானது. இதேபோல் சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படும் நிலையில், இன்னொரு ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடிப்பார் எனவும் இணையத்தில் தகவல் உலா வருகின்றது. எதுவும் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், முக்கிய கேரக்டர்களில் ஜெய், அபர்ணா தாஸ், பிரசாந்த் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 


பிரேம்ஜிக்கு விஜய் போட்ட கண்டிஷன்


இதனிடையே வெங்கட் பிரபு படங்களில் தவறாமல் நடித்து வரும் அவரது தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கு ‘தளபதி 68’ படத்தில் இடம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு காரணம் பிரேம்ஜி - வெங்கட் பிரபு இருவரும் ‘சென்னை -28’ படத்தின் 2ஆம் பாகம் வெளியான போது கொடுத்த நேர்காணல் தான். அதில் முதலில் வெங்கட் பிரபு, ‘மங்காத்தா படம் பார்த்துவிட்டு விஜய் என்னை வீட்டுக்கு டின்னருக்கு அழைத்தார். முதலின் நான் மட்டுமே சென்ற நிலையில் பிரேம்ஜி வரவில்லையா என கேட்டார். நான் அவன் எதுக்கு? என கேள்வியெழுப்ப, என்னோட குழந்தைகள் பார்க்க விரும்புவதாக கூறினார்.


நான் உடனே பிரேம்ஜிக்கு போன் செய்து வர சொன்னேன். விஜய்யின் மகன், மகள் இருவரும் அவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். எனக்கு அந்த தருணம், பிரேம்ஜிக்கு இப்படி ஒரு ரசிகர்களா என நினைத்து  பார்க்கும்போது ‘என்ன கொடுமை சார் இது?’ என்ற கேள்வி தான் மனதுக்குள் ஓடியது. தொடர்ந்து அவனுக்கு நிறைய அறிவுரை வழங்கினார். அண்ணன் படத்தில் மட்டும் நடிக்காமல் மற்றவர்களின் படங்களிலும் நடிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் நானும் - வெங்கட் பிரபுவும் இணையும் படத்தில் நீ நடிக்கக்கூடாது என சொன்னார். ஏன் என காரணம் கேட்க, ‘நீ தலையோட (அஜித்) ஆளு. அதனால் என்னோட நீ நடிக்க வேண்டாம். வேண்டுமானால் மியூசிக் போட்டுக்கோ என தெரிவித்து விட்டார். உடனே பிரேம்ஜி, ‘அண்ணா..ஏற்கனவே உங்க ரசிகர்களை எங்களோட கிண்டல் பண்றாங்க. நீங்களும் நடிக்ககூடாது என கெஞ்சினார்” என அந்த நேர்காணல் வேடிக்கையாக செல்கிறது.