மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடித்த  எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஏன் தனுஷ் கோடி  எனப் பெயர் வைக்கப்பட்டது என்பது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார். 


இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “  ரொம்ப பவர் ஃபுல்லான பேரு வேணும் அப்படிங்கிறதாலத்தான் அந்தப் பெயரை வைச்சோம். ரஜினி - கமல், அஜித் - விஜய் வரிசையில் சிம்பு அப்படினாலே தனுஷ் பேருதான் நினைவுக்கு வரும். சிம்பு அப்படினாலே தனுஷ் பேருதான் நியாபகத்துக்கு வரும். அந்தப் பேரே வைச்சாலே ஒரு பவர் வந்துரும். ஆனா ரியல் வாழ்கையில இரண்டு பேரும் நண்பர்கள்தான். இதற்காக தனுஷே போன் பண்ணி சந்தோஷப்படுவார்” என்று கூறியுள்ளார். 




முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மாநாடு. இந்தப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படம் முதலில் அண்ணாத்த திரைப்படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு களமிறங்க தயாராக இருந்தது. ஆனால் திடிரென்று படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் அன்றைய தினமும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் படம் வெளியானது.






 


படம் தற்போது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றிக்கு காத்திருந்த சிம்புவிற்கு இந்தப் படம் அந்த வெற்றியை பெற்று தந்திருக்கிறது. சிம்புவின் நடிப்பை போலவே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. மாநாடு படம் வெளியான 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 22 கோடி வசுல் செய்துள்ளதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.