வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் டிரெய்லர் இன்று காலை வெளியானது. இயக்குனர் ஏஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.
”வந்தான்.. கொன்னான்.. ரிப்பீட்டு” என நோலனின் டைம் டிராவலும், அரசியலும் கலந்ததாக இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிரெய்லர் தொடங்கியதில் இருந்து கடைசி வரை சிம்பு ஓடிக் கொண்டே இருக்கிறார், எஸ்.ஜே சூர்யா காவல் துறை அதிகாரியாக வருகிறார். “அல்லாவும் சிவனும் சேர்ந்து உங்க மூலமா ஏதோ நடக்கனும்னு நினைக்கிறாங்க” என வசனம் வருகின்றது. ஒரு வேளை, சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூட இருக்கலாம்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு. இதன் படப்பிடிப்பு கடந்த ஜூலை 9ஆம் தேதி நிறைவடைந்தது. அப்போது, படத்தின் கதாநாயகன் சிம்பு படக்குழுவினர் 300 பேருக்கு வாட்ச் பரிசாக கொடுத்து அசத்தினார். வாட்ச் வழங்கியதற்கு சிம்புவுக்கும், தனது மாநாடு குழுவுக்கும் நன்றி கூறிய இயக்குநர் வெங்கட் பிரபு, விரைவில் அப்துல் காலிக்கை பார்ப்பீர்கள் என்று ட்வீட் செய்தார். இதனைத்தொடர்ந்து, படத்தின் மீதி பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ‘மாநாடு’ திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கடந்த 11ஆம் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மாநாடு, அண்ணாத்த, தீபாவளி ரேஸில் குதிக்க உள்ளது ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.