தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் வாத்தி. இதில் தனுஷூக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 


 



தனுஷ் - வெங்கி அட்லூரி



இயக்குநர் வெங்கி அட்லூரி :
 
வாத்தி ஆடியோ லான்ச் விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில் "ஒரு கதையை நான் தனுஷ் சாரிடம் நான் சொல்கிறேன். அவ்வளவு தான் அதற்கு மேல் எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவரிடம் நான் கதை சொன்னதையே பெரிய சாதனையாக கருதுகிறேன். தனுஷ் சாரிடம் நான் முழு கதையையும் நரேட் செய்த பிறகு அவர் ஒன்றும் கூறாமல் கைகளை மட்டும் தட்டினார். பிறகு க்யூட்டான தெலுங்கில் டேட்ஸ் எப்போது கொடுக்கட்டும் என கேட்டார். நான் அப்படியே அதிர்ச்சியடைந்துவிட்டேன். அந்த தருணத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது" என்றார் இயக்குநர் வெங்கி அட்லூரி. 






ஜி.வி. பிரகாஷ் பெருமிதம் :


மேலும் வாத்தி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில் "எனக்கும் தனுஷுக்கும் இடையில் யார் அதிர்ஷ்டசாலி என தெரியவில்லை. ஆனால் அவர் தேசிய விருது வாங்கிய இரண்டு திரைப்படங்களிலும் நான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளேன்  என நினைக்கையில் பெருமையாக உணர்கிறேன். மேலும் அவருடன் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி" என்றார். 






இரண்டு படங்களுக்கு தேசிய விருது :


நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2011ம் ஆண்டு ஆடுகளம் படத்திற்காகவும் 2020ம் ஆண்டு அசுரன் திரைப்படத்திற்காகவும் பெற்றுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியது ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.     


வாத்தி ஆடியோ லான்ச் விழாவில் தனுஷ் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.