குமரியின் வற்றா ஜீவநதியாக குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் தான் கிள்ளியூர், விளவங்கோடு, கல்குளம் ஆகிய தாலுகா மக்களுக்கு மட்டுமின்றி, குமரியில் சுமார் 85 சதவீத மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய குழித்துறை குடிநீர் திட்டம், பைங்குளம் குடிநீர் திட்டம், கொல்லங்கோடு ஏழுதேசம் குடிநீர் திட்டம், சுனாமி கூட்டுக்குடி நீர்திட்டம், இப்படி 50-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. இந்த குடிநீர் திட்டங் களுக்கான குடிநீர் கிணறுகள் இந்த ஆற்றங்கரை ஓரங்களில்தான் உள்ளது. இந்த ஆறும் கடலும் சங்கமிக்கும் தேங்காப்பட்டணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டது. இதன் பின்னர் கடல் நீர் எளிதில் ஆற்று நீருடன் புகுந்ததால் குடிநீர் கிணறுகளில் இருந்து மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு உப்பு கலந்த குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. குடிநீர் பைப்புகளும் உப்பு நீரால் சேதம் அடைந்து வந்தது. இதனால் பரக்காணியில் தடுப்பணை கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.



 

இந்த கோரிக்கையை ஏற்று 16 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த பகுதியில் பருவ மழை காலங்களில் ஆண்டுக்கு 3-க்கும் மேற்பட்ட முறை வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கை. இது போன்ற நேரங்களில் பரக்காணியின் மறு பகுதியில் உள்ள இடக்குடி, மரப்பாலம் வைக்கல்லூர் போன்ற கிராமங்களில் தண்ணீர் புகுந்து வீடுகள் சேதம் அடைவதும், வீடுகள் இடிந்து விழுவதும் தொடர்கதையாக நடந்து வந்தது. அதே நேரம் தடுப்பணை பணி முடிந்தால் இந்த பாதிப்பு இருக்காது என மக்கள் கருதுகின்றனர். ஆனால் தடுப்பணை பணியை முழுமையாக முடிக்காததால் மறுபகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தடுப்பணையின் ஒரு பகுதியில் மட்டும் மண் போட்டு நிரப்பி உள்ளனர். இந்த மண்ணும் வரும் மழைக் காலங்களில் தாக்குப் பிடிக்காமல் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தடுப் பணை மறுபகுதியை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேஷ் பாபு, பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, முஞ்சிறை கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் குமார், யூனியன் கவுன்சிலர் பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் பாரதிய ஜனதாவினர் தடுப்பணையை பார்வையிட்டனர்.



அதன்பின்னர் வரும் நவம்பர் மாதம் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தடுப்பணை மறுபகுதியில் மண் போட்டு நிரப்புவது மட்டுமின்றி, ஆற்றங்கரை ஓரத்தில் பக்கச்சுவர் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இல்லையேல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், உட்பட பல கலந்து கொண்டனர்.