வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரெட்ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‛வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நேற்று சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் நிறுவன கல்லூரியில் கோலகலமாக நடந்தது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் சிம்புவின் படம் வெளியாக இருப்பதால், அவரது ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே சிம்பு-கவுதம்வாசுதேவ் மேனன் வெற்றி கூட்டணி இருப்பதால், இந்த படத்திலும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கடும் எதிர்பார்ப்போடு இந்த திரைப்படம் வெளியாக இருப்பதால், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என பலரும் இத்திரைப்படத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
கிராமப் பின்னணியோடு துவங்கும் இந்த கதை, கவுதம் வாசுதேவ் மேனனுக்கு புதிய களமாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரெய்லர், 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி, ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.
சிம்பு ரசிகர்கள், ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள், கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்கள் என பலதரப்பட்ட ரசிகர்களும் ட்ரெய்லரை ஆவலோடு பார்த்து வருவதால், ட்ரெய்லர் பார்வையாளர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.