மல்லி பூ பாட்டை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம் என்று அந்தப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்த மாஸ்டர் பிருந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான இந்தப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அண்மையில் படத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் படத்தை விமர்சிப்பவர்கள் எங்கள் பொழப்பில் மண் அள்ளி போடுவதாக தோன்றுகிறது என்று காட்டமாக பேசியிருந்தார்.
விமர்சன ரீதியாக பார்த்தால் படம் சுமார்தான் என்றாலும் படத்தை பார்ப்பதற்கு சுவாரசியமாக மாற்றியதில் சிலம்பரசனின் நடிப்புக்கும், ஏ.ஆர்.ஆரின் இசைக்கும் பெரும் பங்கு இருந்தது. ‘மறக்குமா நெஞ்சம்’ ‘மல்லி பூ’ உள்ளிட்ட பாடல்கள் எகிடுதகிடு ஹிட் அடித்துள்ளன. அதிலும் குறிப்பாக ‘ மல்லி பூ’ இன்று சோசியல் மீடியாவின் வைரல் பாடலாக மாறியிருக்கிறது.
பாடலாசிரியர் தாமரை எழுதிய இந்தப்பாடலை பாடகி மது ஸ்ரீ பாடியிருந்தார். நீண்ட நாட்களாக கணவனை பிரிந்து வாடும் மனைவி பாடும் பாடலாகவும், அதை கணவன் மற்றும் அவரது நண்பர்கள் கேட்டு ரசிப்பதுமாக காட்சிகளும் மிக இயல்பாக வடிவமைக்கப்பட்ட்டிருந்தன. இந்த நிலையில் இந்தப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்த பிருந்தா மாஸ்டர் இந்தப்பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த ட்விட்டில், “ மல்லி பூ பாடலை கொடுத்தற்காக கெளதம் மேனனுக்கும், மிக சிறந்த டான்ஸரான சிலம்பரசனுக்கு என்னுடைய நன்றி. இந்தப்பாடலை சிங்கிள் ஷாட்டில் முடிக்கும் போதே அதன் ரெஸ்பான்சை பார்த்தேன். அப்போதே இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
மல்லிப்பூ பாடல் உருவான கதை
அதே போல மல்லிபூ பாடல் குறித்து பேசும் போது, “ நான் சிச்சுவேஷன் சொன்னப்ப ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த இடத்துல ஒரு பாட்டு இருந்தா நல்லயிருக்கும்ன்னு சொன்னார். ஒரு பல்லவியா கூட இருக்கலாமே.. மனைவிக்கிட்ட பேசுற அவன் ஒரு பாட்டு பாடுனா எப்படி இருக்கும்னு சொல்லி ஒரு பாட்டு வைக்கலாமேன்னு சொன்னார். அதைத்தான் நான் அப்படியே சீனா வைச்சேன்” என்றார்.