இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம், வெந்து தணிந்தது காடு. இப்படம் செப்டம்பர் 15ல் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.  படக்குழு சார்பாக படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் தேதியினை வெளியிட்டார்.






இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என  கூறப்பட்டுள்ள நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.






இந்நிலையில் படத்தின் இயக்குநர் கௌதம் மேனன், இந்த படத்தைப் பற்றி பேசினார். அவர், “நடிகளில் நீராடும் தான் முதலில் படத்துக்கு வைத்த தலைப்பு. திடீரென ஜெயமோகன் ஒரு லைன் சொன்னார். அதை சிம்புவிடம் சொன்ன போது அவர் ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தில் என்ன கதை என்று எனக்கே தெரியாது.ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களாலான இந்த கதை எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஒரு நல்ல படத்தை செய்துள்ளோம் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.


இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதற்கு முன்னர் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களும் சூப்பர் டூப்பட் ஹிட் அடித்த படங்கள். அதன் பாடல்களும் ஹிட், இன்றைக்கும் பலரது ரிங் டோனாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.