ஏராளமான ஹீரோயின்கள் சினிமாவில் பிரபலமான பிறகு பாடகியாகவும் தன்னை நிரூபித்துள்ளனர், அந்த வகையில் பாடகியாக பிரபலமான பிறகு நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை வசுந்தரா தாஸ். ஹே ராம் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மனைவியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். 


 



பாடகி எப்படி நடிகையானார் :


இயக்குநர் ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் ஏ.ர். ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் பாடலாக வெற்றி பெற்ற 'ஷகாலக்க பேபி' பாடலை பாடியதன் மூலம் இளவட்டங்கள் நெஞ்சங்களில் டைரக்ட் என்ட்ரி கொடுத்தார். முதல் பாடலே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. குஷி படத்தில் இளைஞர்களின் விருப்பமான பாடலான 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடலை பாடியது வசுந்தரா தாஸ் என்பது பலரும் அறியாதது.


பாடகியாக அசத்தியவரை உலகநாயகன் நடிக்க வைத்து அழகு பார்த்தார். நடிகையாகவும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அஜித்குமார் ஜோடியாக 'சிட்டிசன்' படத்தில் நடித்தார். தமிழ் படங்களை தொடர்ந்து கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் இருந்து வந்தார். 


பலரும் அறியாதது :


வசுந்தரா தாஸ் பாடிய ஒரு சில பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை அவர் தான் பாடியுள்ளார் என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமின்றி தேவா, தினா, ஹாரிஸ் ஜெயராஜ், விஜயபாஸ்கர், யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி. பிரகாஷ் குமார் என ஏராளமான முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.


உதித் நாராயணனுடன் இணைந்து 'ரிதம்' படத்தில் இடம்பெற்ற 'ஐய்யோ பத்திக்கிச்சு' பாடலை பாடியுள்ளார். தேவா இசையில் சிட்டிசன் படத்தில் 'பூக்காரி' மற்றும் 'நான் உன்னை விரும்புகிறேன்', அந்நியன் படத்தில் 'கண்ணும் கண்ணும் நோக்கியா' என்ற பாடலை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வசுந்தராவே பாடியிருந்தார். சில்லுனு ஒரு காதல் படத்தில் 'மச்சக்காரி', சிவகாசி படத்தில் 'தீபாவளி தீபாவளி', பாய்ஸ் படத்தில் 'டேட்டிங்', மன்மதன் படத்தில் 'தத்தை தத்தை', அன்பே ஆருயிரே படத்தில் 'மரங்கொத்தியே' பாடல் என ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் வசுந்தரா தாஸ்.  தனது தனித்துவமான குரலால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த வசுந்தரா தாஸ் மேலும் பல பாடல்களை பாட வேண்டும் என்பது தான் அவரின் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.