சிகப்பு ரோஜாக்கள் பார்ட் 2வில் தரமணி ஹீரோ வசந்த் ரவி இருப்பார் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.


சிகப்பு ரோஜாக்கள், 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்களில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்த் திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள்.


கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றார். பாரதிராஜா சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றார். இந்தி மொழியில் 'ரெட் ரோஸ்' எனும் பெயரில் 1980 ஆண்டில் ராஜேஷ் கன்னா நடிப்பில் இயக்குநர் பாரதிராஜா மீண்டும் படமாக்கினார்.


இத்திரைப்படம் வெறும் 20 நாட்களில் படமாக்கப்பட்டது. 1960களில் வடஇந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட ராமன் ராகவா எனும் நபரின் கொலை வழக்கு தனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், பின் அத்தாக்கத்தின் அடிப்படையில் சிகப்பு ரோஜாக்கள் கதை உருவாக்கப்பட்டது என பாரதிராஜா அப்போது பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
மேலும், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் என்ற கிராமத்துக் கதைகளை மட்டும் எடுக்க முடிந்தவர் பாரதிராஜா என்ற விமர்சனங்களுக்கு சிகப்பு ரோஜாக்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார்.




இப்போது, சிகப்பு ரோஜாக்கள் பார்ட் 2 எடுக்க ஆயத்தமாகி வருகிறார். இந்தப் படத்தில் தரமணி திரைப்பட ஹீரோ வசந்த் ராஜ் ஹீரோவாக நடிப்பார் என்று பாரதிராஜாவே உறுதிபடத் தெரிவித்துள்ளார். ராக்கி திரைப்பட விழாவில் இதனைத் தெரிவித்தார்.


தரமணி புகழ் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராக்கி. இந்தப் படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான எதிர்பார்ப்பை படத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. 


இந்தப் படம் ஒரு கேங்க்ஸ்டர் படம். இதில் பாரதிராஜா கேங்க்ஸ்டராக மிரட்டுகிறார். அதேபோல் நடிகை ரோகினியும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


படத்தைப் பற்றி பாரதிராஜா, விக்னேஷ் சிவன் சிலாகித்துப் பேசினர். அப்போது பாரதிராஜா தனக்கு நடிகராக வேண்டும் என்றே ஆசை ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. சிகப்பு ரோஜாக்கள் 2 படத்திற்கு வசந்த் ரவி ரொம்ப பொருத்தமாக இருப்பான். கமல்ஹாசன் கூட அந்தக் கேரக்டரில் சில இடங்களில் மென்மையாகத் தெரிந்தார். ஆனால் வசந்த் ரவி சரியாக இருப்பார். வசந்த் ரவி அசப்பில் கொஞ்சம் பிரெஞ்சு ஹீரோ மாதிரி என்று ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார்.