8 ஆண்டுகளுக்குப் பின் நடிகர்கள் விஜய், அஜித்தின் படங்கள் நேரடியாக மோதவுள்ள நிலையில், இதுவரை நேருக்கு நேராக அமைந்த அவர்களின் திரைப்படங்களின் பின்னணி பற்றி காணலாம். 


ஒரே நேரத்தில் வளர்ச்சி


நடிகர் அஜித், 1990-ல் வெளியான என் வீடு என் கணவர் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் பிரவேசித்தார். ஆனால், நடிகர் விஜய்யோ 1984 வெளியான வெற்றி, குடும்பம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நாளைய தீர்ப்பு படம் மூலம் 1992 ஆம் ஆண்டில் ஹீரோவாக நடிகர் விஜய் அறிமுகமாக, 1993ஆம் ஆண்டில் வெளியான அமராவதி படம் மூலம் அஜித் அறிமுகமானார்.


இவர்கள் இருவருமே தொடர்ந்து பல படங்களின் மூலம் வளர்ந்துக் கொண்டே போக, இவர்களுக்குள்ளான போட்டியும் வளர்ந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில், இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்திலும் நடித்தனர். இதுதான் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ஆகும். 


க்ளாஷான விஜய்-அஜித் படங்கள்


கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி


1996-ல் விஜய் படமும் அஜித் படமும் ஒரே சமயத்தில் முதல் முறையாக பொங்கல் பண்டிகையின்போது நேருக்கு நேர் மோதின. விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படம் ஜனவரி 15ஆம் தேதியும், அஜித்தின் வான்மதி படம் ஜனவரி 12ஆம் தேதியும் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய ஹிட் அடித்தது. இதில் அஜித்தின் வான்மதி படம் மட்டும் திரையரங்குகளில் 150 நாட்களைக் கடந்தது. 


பூவே உனக்காக vs கல்லூரி வாசல்


1996 பொங்கல் க்ளாஷ் வந்த ஒரு மாதத்திலேயே விஜய்-அஜித்தின் அடுத்த படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்பட்டன. விஜய்யின் பூவே உனக்காக திரைப்படம் பிப்ரவரி 15 அன்று வெளியாக, அஜித்தின் கல்லூரி வாசல் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியானது. ஆனால் கல்லூரி வாசல் திரைப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க, அஜித் அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய்யின் பூவே உனக்காக படம் ஃபேமலி ஆடியன்சிற்கு பிடித்துப்போக, அஜித் நடித்த கல்லூரி வாசல் திரைப்படம் தோல்வியைத் தழுவியது. 


நேசம் vs காலமெல்லாம் காத்திருப்பேன்


விஜய்யும் அஜித்தும் 1997-ல் அனைத்து இயக்குனர்களாலும் விருப்பமான நாயகர்களாக வளர்ந்துக் கொண்டிருந்தனர். அந்த ஆண்டில் பொங்கலையொட்டி, விஜய்யின் காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படம், ஜனவரி 14 அன்று வெளியாக, அஜித்தின் நேசம் திரைப்படம் அதற்கு மறுநாள் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே மக்களிடமிருந்த சுமார் என்ற விமர்சனத்தைத்தான் பெற்றது. வசூலும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை. 


இரட்டை ஜடை வயது vs காதலுக்கு மரியாதை


1997ஆம் ஆண்டிலேயே டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அஜித்தின் இரட்டை ஜடை வயது என்ற படம் வெளியானது. அதற்கு ஒரு வாரம் கழித்து விஜய்யின் காதலுக்கு மரியாதை படம் ரிலீஸானது. இரட்டை ஜடை வயது நல்ல விமர்சனம் பெற்று ஓரளவு வசூலை குவித்தாலும், விஜய்யின் காதலுக்கு மரியாதை படம்தான் ஹவுஸ்ஃபுல் ஷோக்களாக ஓடி வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றது. 


துள்ளாத மனமும் துள்ளும் vs உன்னைத்தேடி


1999ஆம் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படம் ஜனவரி 29அன்று வெளியாக, அஜித்தின் உன்னைத்தேடி படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது. இதில் துள்ளாத மனமும் துள்ளும் படமே வெற்றிப்பெற்றது. அஜித்தின் உன்னைத்தேடி படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளை பெற்றது. 




குஷி vs உன்னைக் கொடு என்னைத் தருவேன்


2000ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து, விஜய்யின் குஷி படமும்,  அஜித்தின் உன்னைக்கொடு என்னை தருவேன் படம் மே 19 ஆம் தேதி ஒன்றாக வெளியானது. இதில், குஷி படம் அனைவருக்கும் பிடித்துப்போக, அஜித்தின் உன்னைக்கொடு என்னைத் தருவேன் படம் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து தோல்வியையேத் தழுவியது. 


தீனா vs ஃப்ரண்ட்ஸ்


அஜித்தின் தீனா படமும், விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஃப்ரண்ட்ஸ் படமும் 2001 பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகின. இதில் இரண்டு படங்களுமே வெற்றிப்பெற்றன. ஆனால், ஃப்ரண்ட்ஸ் படம் மட்டும்தான் 175 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடியது. தீனா அஜித்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. 


பகவதி vs வில்லன் 


2002 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிக்கு விஜய், ரீமாசென் நடிப்பில் ஏ. வெங்கடேஷ் இயக்கிய பகவதி படம் வெளியானது. அதேசமயம் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படமும் வெளியாகியிருந்தது. இதில் வில்லன் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பகவதி படம் விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவதற்கு அடித்தளமாக அமைந்தது. 


திருமலை vs ஆஞ்சநேயா


2003ஆம் ஆண்டில் விஜய்யின் திருமலை படமும் அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படமும் தீபாவளியன்று வெளியானது. இதில், திருமலை படமே வெற்றிப்பெற்றது. ஆஞ்சநேயா படம் கடும் தோல்வியடைந்தது. 




ஆதி vs பரமசிவன்


அடுத்த 2 ஆண்டுகளாக விஜய்-அஜித் படம் நேருக்கு நேர் களமிறங்காத நிலையில், 2006 ஆம் ஆண்டு விஜய்க்கு ஆதி படமும், அஜித்துக்கு பரமசிவன் படமும் பொங்கலையொட்டி வெளியானது. இதில் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களுடன் பெரிதாக வெற்றிப்பெறாத படங்களாகவே அமைந்தன. 


போக்கிரி vs ஆழ்வார்


2007ஆம் ஆண்டில் விஜய்யின் போக்கிரி படமும் அஜித்தின் ஆழ்வார் படமும் வெளியானது. இதில் போக்கிரி படம் 100 நாட்களை கடந்து வெற்றியைப் பெற்றது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ஆழ்வார் திரைப்படம் மண்ணைக் கவ்வியது.


7 ஆண்டுகளுக்கு பிறகு மோதல்


அதன் பிறகு அஜித்-விஜய்யின் திரைப்படங்கள் 7 ஆண்டுகளாக ஒன்றாக வெளியிடப்படாமல் இருந்தது. அதற்கு வர்த்தக ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு அதற்கு முடிவு எழுதப்பட்டது. விஜய் நடித்திருந்த ஜில்லா படம் பொங்கலையொட்டி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக, அஜித்தின் வீரம் படமும் அதே தேதியில் வெளியாகியிருந்தது. இதில், வீரம் படம் பெரும் வெற்றிப்பெற்றது. அதே சமயத்தில் ஜில்லா திரைப்படம் மிக நீளமாக இருந்தது பட தோல்விக்கான காரணமாக கூறப்பட்டது. 


துணிவு vs வாரிசு


ஜில்லா-வீரம் படத்திற்கு பிறகு, 8 ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய்யின் திரைப்படங்கள் வரும் பொங்கலுக்கு மோதவுள்ளன. இந்த முறை வெற்றி யாருக்கு என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் எழுந்து வருகிறது. துணிவு படத்தின் ரிலீஸ் இம்மாதம் 11ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு படமும் அதே தேதியில் ரீலிஸ் ஆகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.