நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர், இன்று வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்ப்போம்.


தமிழகத்தை பொருத்தவரை, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் ஆகிய ஹீரோக்களுக்கு அடுத்து, இந்த தலைமுறையின் பெரிய நாயகர்களாக அஜித் - விஜய் கொடிகட்டி பறந்து வருகின்றனர். அஜித் - விஜய் என்ற இவர்களின் பெயர்களுக்காகவே, திரையரங்களுக்கு வந்து அவர்களின் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் கூட்டமும், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் கூட்டமும், கதை சிறப்பாக இல்லையென்றாலும் படத்தை பார்க்க வரும் கூட்டமும் உள்ளனர்.




ஆரம்ப காலகட்டத்தில் காதல் மன்னர்களாக நடித்து 90’களை கலக்கி வந்த இருவரும் சேர்ந்து “ராஜாவின் பார்வையிலே” படத்தில் மட்டுமே நடித்தனர்.  கடைசியாக, 2014 ஆம் ஆண்டில் அஜித்தின் வீரம்- விஜய்யின் ஜில்லா பொங்கலையொட்டி வெளியாகியது. தற்போது, பல ஆண்டுகள் கழித்து துணிவு - வாரிசு ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதால், அஜித்தின் படமும் விஜய்யின் படமும் நேரடியாக மோதவுள்ளது.



படம் வெளியாவதற்கு முன்பே, வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, விஜய்தான் நம்பர் ஒன் ஸ்டார் என ப்ரோமோஷன் செய்து வருகின்றார். இந்நிலையில், விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு வருகின்றனர். வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியான பிறகு துணிவு படத்தில் சில்லா சில்லா பாடல் வெளியானது. அதன் பின், தீ தளபதி - காசேதான் கடவுளா பாடலும், சோல் ஆஃப் வாரிசு - கேங்ஸ்டா ஆகிய பாடல்களும் வெளியானது. இதைவைத்து, துணிவு படத்தில் இருக்கும் பாடல்களை விட வாரிசு படத்தில் இருக்கும் பாடல்கள் நன்றாக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.




கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில், அஜித்தின் விண்டேஜ் வில்லத்தனமும், ஹெச்.வினோத்தின் திரைக்கதையும் நன்றாக பின்னி பிணைந்துள்ளது என்பது தெரிகிறது. இதனால் பொது மக்களிடம் இது நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் ரசிகர்கள் சிலர் “ இதை பார்க்கும் போது பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் போல் உள்ளது” என்றும் “ பீஸ்ட் படத்தில் அஜித் நடித்து இருந்தால் இப்படித்தான் இருக்கும்” என்றும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.




துணிவு பட ட்ரெய்லர் வெளியான பின், விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தின் ட்ரெய்லருக்காக காத்து இருந்தனர். சிறந்த ட்ரெய்லரை கொடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்ததாகவும் அத்துடன், எடிட் செய்யப்பட்டிருந்த ட்ரெய்லரை மீண்டும் எடிட் வேலைக்காக அனுப்பியதாகவும், இதனால்தான் ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திப்போனதாகவும் கூறப்பட்டது. தற்போது, அனைவரின் எதிர்பார்ப்பிற்கு பின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை  பார்க்கும்போது, பக்கவான தெலுங்கு படத்தை தமிழ் ஹீரோவை வைத்து எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது வாரிசு ட்ரெய்லர். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மகேஷ் பாபு மற்றும் ஷ்ருதி ஹாசன் நடித்த “ஸ்ரீமந்துடு” படத்தின் கதை போல் இருக்கிறது. 


வாரிசு படத்தின் கதை  எப்படி இருக்கும்?


நன்றாக வாழும் பணக்கார குடும்பத்தில் திடீர் பிரச்சினை கிளம்புவதும், அந்த குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஹீரோ(விஜய்) அதை எதிர்கொண்டு மீண்டு வருவதும் படத்தின் கதையாக இருக்கும். இதன் இடையில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதலும், காதலியுடன் ரெண்டு பாடல்களும், இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் தாறுமாறான சண்டை காட்சிகளும் , குடும்ப ஆடியன்ஸ்களுக்கு அம்மா செண்டிமெண்டும் அதற்காக ஒரு பாடலும் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. ஆக மொத்தம் இது கோலிவுட் நடிகர் நடிக்கும் கமர்ஷியல் தெலுங்கு டெம்ப்ளேட் படமாகும்.


வழக்கமாக இது போன்ற படங்களில், அஜித் தொடர்ந்து நடித்து வந்தார். அஜித்தின் விவேகம் படத்தில் காஜலின் காதலும், வலிமை படத்தில் அம்மாவின் செண்டிமெண்டும் படத்தை சொதப்பியது. இதனால் சிலர், அஜித்திற்கு சிறுத்தை சிவா போல, விஜய்க்கு வம்சியா என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.