நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  ஜனவரி 13 முதல் 16 ஆம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தியேட்டர் வளாகத்தில் பெரிய பேனர் வைப்பதற்கு, பாலாபிஷேகம் செய்வதற்கும் அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. 


அதேபோல் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  டிக்கெட்டுகளில் இதுதொடர்பாக புகாரளிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மூன்றாவது முறையாக கூட்டணி 


மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


வாரிசு 


இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. ட்ரெய்லர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியானது. 


ஒரே நாளில் ரிலீஸ் 


வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் நாளை (ஜனவரி 11) ரிலீசாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி வரையிலான காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் காட்சிகளை ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சியும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சியும் திரையிடப்படுகிறது.