பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பார்க்கும் இடமெங்கும் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தது. 


இதனிடையே படம் வெளியாகி ஒருபுறம் விஜய் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், மறுபுறம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக பேமிலி ஆடியன்ஸை கட்டிப்போட்டுள்ளது. இதனால் ஜனவரி 17 ஆம் தேதி வரை பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறியுள்ளது. தெலுங்கை தவிர பிற மொழிகளில் வாரிசு படம் 11 ஆம் தேதி வெளியான நிலையில், நேற்று முன் தினம் தெலுங்கில் வெளியானது. வழக்கமாக தெலுங்கு திரையுலக ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு விஜய்க்கும் கொடுக்கப்பட்டது தமிழ் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


இந்நிலையில் வாரிசு படம் இந்தியாவில் மட்ர்டும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் உலக அளவில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படம் வெளியான அடுத்த இரண்டு நாள்களில் குறைவான வசூலையே ஈட்டிய நிலையில், பொங்கல் விடுமுறையை அடுத்த கடந்த இரண்டு நாள்களில் இந்தியாவில் மட்டும் 38.9 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 






மேலும் அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் பட வசூல் சாதனையை வாரிசு முறியடித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 






அத்துடன் இந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியான வாரிசு படம் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நேரடி இந்தி படங்களைத் தாண்டி வசூல் சாதனை புரிந்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.