அனுமதியின்றி படப்பிடிப்பில் யானைகளை பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் வாரிசு படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.






பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் முன்னதாக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே வெளியானது. விஜய் பாடியிருந்த இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வாரிசு படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  மேலும் தெலுங்கு ரிலீஸில் எழுந்த பிரச்சனையும் தீர்க்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் அனுமதியின்றி யானைகளை நடிக்க வைப்பதாக தகவல் வெளியானது. இதனை செய்தி சேகரிக்க சென்ற தனியார் ஊடக ஊழியர்கள் மீது படப்பிடிப்பு ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரில் 3 பேரை நசரத் பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அதேசமயம் அனுமதியின்றி யானைகள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரும் உறுதிச் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 






இந்நிலையில் மத்திய  அரசின் முன் அனுமதியை பெறாமல் யானைகளை பயன்படுத்திய புகாரில் விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.