இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களின் அப்டேட்டுகள், தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் வெளியான சுவாரஸ்யமான சினிமா தகவல்கள் குறித்து பார்க்கலாம்.
வாரிசு பட சூட்டிங்கில் நடந்த கைகலப்பு:
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் அங்கு செய்தியாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அனுமதியின்றி யானைகளை படப்பிடிப்பில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதே தகராறுக்கு வழிவகுத்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செய்தியாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
குணமடைந்த பின் மீண்டும் ஒர்க் அவுட் மோடிற்கு சென்ற பீஸ்ட் நாயகி :
தனது பிசி ஷூட்டிங்கிற்கு மத்தியில் முன்னதாக வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தார். ஆனால் இன்பச்சுற்றுலாவில் இருந்து காலில் அடிபட்டு பூஜா திரும்பினார். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு தன் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில், கடந்த சில வாரங்களில் உடல்நலன் தேறி மீண்டும் தனது ரெகுலர் ஒர்க் அவுட் வாழ்வுக்கு தற்போது திரும்பியுள்ளார் பூஜா.
கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் :
கைதி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கிற்கு போலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், நடித்துள்ள நடிகர் நடிகைகள் குறித்து எந்த தகவல்களும் வெளிவரப்படாத நிலையில், அஜய் தேவ்கன் கார்த்தியின் கதாப்பாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். 3 டியில் தயாராகியுள்ள இந்தப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த செய்தியினால் பலர் மகிழ்ச்சி அடைந்தாலும், அந்த ஹிந்தி டீசரை பார்த்து சிலர் புலம்பியும் வருகின்றனர்.
டாலிவுட்டில் கால் பதித்த ஜாலி இயக்குநர் :
நடிகர் நாகசைதன்யாவை வைத்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வரும் அடுத்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு கஸ்டடி என பெயரிடப்பட்டுள்ளது.
கைவிடப்படுகிறதா வெற்றிமாறனின் ”அதிகாரம்” :
அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் திரைவட்டாரத்தில் சலசலப்பு எழுந்த நிலையில், இது குறித்த விளக்கமொன்றை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் “ அதிகாரம் படம் ட்ராப் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. படத்திற்கான எழுத்துப்பணிகள் மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கான திட்டப்பணிகள் உள்ளிட்டவை சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளது.