கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் ரிலீசாக இன்று அதிகாலை வெளியான வாரிசு படம்  குடும்பப் பாசம் - ஆக்ஷன் கலந்த கலவையாக விஜய் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.


தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா,  பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, சம்யுக்தா என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.


முன்னதாக வாரிசு படம் இன்று மாலை வரை சுமார் 10 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.  ’குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் பாராட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.


இந்நிலையில், வாரிசு படத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி மகிழ்ச்சியுடன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  ”வாரிசு படத்தின் மீது பொழிந்த இவ்வளவு அன்புக்கும் நன்றி. நண்பா, நண்பிக்களுக்கு நன்றி.. என்னை நம்பியதற்கு தளபதி விஜய்க்கு நன்றி” என வம்சி மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


 






அதேபோல் வாரிசு வெற்றியைக் கொண்டாடும் வகையில்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் பக்கத்தில் விஜய்க்கு தில் ராஜூவும் வம்சியும் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.


 






மற்றொரு புறம் சங்கராந்தி ரிலீசாக தெலுங்கில் வரும் ஜனவரி 14ஆம் தேதி வாரசுடு என்ற பெயரில் வாரிசு படம் வெளியாகிறது.


இந்த ஆண்டு டோலிவுட்டின் மெகா ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் படமும், தெலுங்கு சினிமா உச்ச நட்சத்திரமும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா படமும் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு நேரடியாக மோதவுள்ளன.


டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13ஆம் தேதியும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதியும் ரிலீசாக உள்ள நிலையில் கோலிவுட்டைப் போல் டோலிவுட் வட்டாரமும் களைகட்டியுள்ளது.


இச்சூழலில் விஜய்யின் வாரிசு 14ஆம் தேதி டோலிவுட்டில் வெளியாகி அங்கும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.