நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 






தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 






விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 3 போஸ்டர்கள் வெளியான நிலையில் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களும்,வீடியோக்களும் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் செல்போன்கள் பயன்படுத்த இயக்குநர் வம்சி அதிரடியாக தடை விதித்தார். ஆனாலும் அது எல்லாமே வீண் என்பது போல மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 






தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் டூயட் பாடலில் விஜய்யும், ராஷ்மிகாவும் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளதால் படக்குழு எப்படி இது வெளியே கசிந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் புகைப்படம், வீடியோக்களை பகிர வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 






வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் விரைவில் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.