தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. தளபதியின் 61 வது படமாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, சாம் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக்கிற்கு பிறகு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. தற்போது தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது வாரிசு குறித்த தகவல்கள்.


'வைரல்' விஜய்




வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து விடும் என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக  நடிகர் விஜய் விமான பயணம் மேற்கொண்டார். விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினம் துறைமுகப் பகுதியில் நடைபெற்று வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.


வாரிசு பேமிலி டிராமாவா? இல்லையா?


படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படம் ஒரு ஃபேமிலி டிராமா; குடும்ப செண்டிமெண்ட்கள் நிறைந்த படம் என்று முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போது இந்த படம் குறித்து பேசிய நடிகர் சரத்குமார் வாரிசு 'ஃபேமிலி டிராமா' மட்டுமில்லை. விஜய் படத்திற்கே உரிய ஆக்சன், காமெடி, பைட் எல்லாமே நிறைந்த பேமிலி என்டர்டைனர் தான் வாரிசு என்று கூறியுள்ளார். பவர்ஃபுல்லான கதைக்களத்துடன் உருவாகி வருகிறது என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வாரிசு படம் குறித்த ஆவல் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பு தொடங்கி விட்டதாகவும் அனைத்து பாடல்களும் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழில் மட்டும் வெளியாகும் வாரிசு:


தளபதியின் வாரிசு திரைப்படம் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் எடுக்கப்படுவதால், இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என்று முன்னதாக சொல்லப்பட்ட நிலையில்,  தற்போது இந்த படம் தமிழில் மட்டும் வெளியாகிறது என்ற செய்தி தெலுங்கு ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.


பாப்புலாரிட்டியில் நம்பர் 1- விஜய்!




நடிகர் சரத்குமார் வாரிசு படம் குறித்து கூறுகையில், நடிகர் விஜய் குறித்தும் சில சுவாரசியமான விஷயங்களை கூறியுள்ளார். அப்போது அவர் இந்திய அளவில் விஜய் தான் பாப்புலாரிட்டியில் நம்பர் ஒன் என்றும்; அவருடைய நடிப்பும் பொறுமையும் தன்னை ஈர்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் பெருமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.