நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தப்பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் வகையில் இன்று 'தீ தளபதி' பாடல் வெளியானது ,இந்த பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் பாடினார். இந்த பாடல், வெளியான 21 மணி நேரத்திலேயே ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் வரும் 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மூன்றாவது சிங்கிள் பாடலை அனிருத் நேரில் வந்து பாட போவதாக மற்றொரு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.
இப்படம் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோத உள்ளதை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் காத்துள்ளனர்.