'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில் சக்தி நேர்த்திக்கடன் செலுத்த செல்லும் நிலையில், அங்கு வெற்றி வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


முன்னதாக சங்கிலிக்கும் சக்திக்கும் திருமணத்திற்காக நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், மறுப்பக்கம் வெற்றிக்கும் பூஜாவுக்கும் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திருமணத்தை நிறுத்த மீனாட்சி கடவுளிடம் வேண்டுகிறார். 


இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் வெற்றியிடம் அவரது நண்பர்கள் சக்தி மேல் இருக்கும் காதலை அம்மாவிடம் சொல்லுமாறு வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள். 


அப்பொழுது அங்கு வரும் பூஜா வெற்றி மற்றும் நண்பர்களிடம் திருமணம் நடக்கும் வரை ஒழுங்காக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நடப்பது வேறு என்று எச்சரித்து விட்டு செல்கிறார்.






இதனால் டென்ஷனாகும் நண்பர்கள் வெற்றியிடம் இதற்கு மேல் பொறுமையாக இருக்க வேண்டாம். அம்மாவிடம் சென்று சக்தியை காதலிக்கும் உண்மையை சொல்லிவிடு என்று வெற்றியை அனுப்பி வைக்கிறார்கள். வெற்றியும் அம்மாவிடம் சென்று தனியாக பேச வேண்டும் என்று சொல்ல அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து ரங்கநாயகி தனியாக வருகிறார்.


அப்போது பக்கவாதம் காரணமாக பேசாமல் இருக்கும் வெற்றியின் அப்பா செல்வமுருகன் ரங்கநாயகி என்று கூப்பிடுகிறார். அவர் பேசுவதை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்து சந்தோஷமடைகின்றனர். பின்னர் செல்வமுருகனை பரிசோதிக்கும் டாக்டர் படிப்படியாக அவர் குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த சம்பவத்தால் வெற்றி சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் திரும்பிச் செல்கிறார்.


இதனையடுத்து கோயிலில் சக்திக்கு எடைக்கு எடை பணம் வைத்து நேர்த்திக்கடன் செலுத்த நீதி மணி, புஷ்பா, மீனாட்சி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஏற்பாடுகளை செய்கின்றனர். அதே கோவிலுக்கு வரும் வெற்றியை மீனாட்சி சக்தி சந்திக்கும் நிலையில் அவரை  பரிகாரம் செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.


தராசில் சக்தியை உட்கார வைத்து மூட்டையில் இருக்கும் பணத்தை நீதிமணி தராசில் வைக்க பின்பு புஷ்பா, சங்கிலி, யமுனா என அனைவரும் ஒவ்வொருவராக கொஞ்சம் கொஞ்சமாக தராசில் பணம் வைக்கிறார்கள். ஆனால் தராசு முள் நகராமல் இருக்க அனைவரும் நேர்த்திக்கடன் நிறைவேறாமல் இருப்பதை நினைத்து பதற்றமடைகின்றனர். கடைசியாக கையில் இருக்கும் மொத்த பணத்தையும் அனைவரும் வைத்து விட, தராசு முள் நகராமல் அதே இடத்தில் நிற்க அனைவரும் வருத்தப்படுகின்றனர்.இந்த நேரத்தில் வெற்றி சக்தியை பார்க்க சக்தி வெற்றியை பார்த்துக் கொள்ளும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.