நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நேற்று தான் பொங்கல் தினம் என்றே சொல்லலாம். பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினா நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது. மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பார்க்கும் இடமெங்கும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன்கள் களைக்கட்டியது. இதனால் படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில் வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நடிகர் விஜய் மிகவும் இளமையாக தெரிவதாகவும், ஒன் மேன் ஆர்மியாக படத்தை தாங்குவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல டான்ஸிலும் அவர் நான் கில்லி என்பதை நிரூபித்துள்ளார். வாரிசு பார்த்த ரசிகர்கள் அந்த மகிழ்ச்சியான தருணங்களை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் வாரிசு படம் முதல் நாளில் 19.43 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ள கேரளாவில் 4 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக த்மிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரூ.26 கோடி வரை வாரிசு படம் வசூலித்துள்ளது. ஆனால் தெலுங்கில் இன்னும் படம் ரிலீசாகாததால் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது என சொல்லலாம்.
அதேசமயம் பொங்கல் விடுமுறை நாளை தான் தொடங்கவுள்ளதால் வரும் நாட்களில் வாரிசு படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.