நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் ரூ.250 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாரிசு:
பொங்கல் வெளியீடாக நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது. மெட்ரோ ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என பார்க்கும் இடமெங்கும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
இதனிடையே படம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனால் நேற்றைய தினம் வரை படம் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வாரிசு படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் வாரிசு படம் வெளியான 7 நாட்களில் படம் உலகளவில் ரூ.210 கோடி வசூல் ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
250 கோடி ரூபாய்
இந்த வசூல் தொகை என்பது சாத்தியமே இல்லை என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்த நிலையில், விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் விஜய் உள்ளிட்ட படக்குழு அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வாரிசு படம் 12 நாட்களில் ரூ.250 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக மீண்டும் படக்குழு அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதேசமயம் வாரிசு படத்துடன் வெளியான நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் நிலவரம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.