வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பவுன்சர்களால் ரசிகர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் “வாரிசு”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மூலம் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 2 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கப்போவதால் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த இசை வெளியீட்டு விழாவை எதிர்நோக்கியே இருந்தது.
வழக்கமாக அரசியல் கலந்து உரையை நிகழ்த்தும் விஜய் இந்த முறை எளிமையான கருத்துகளையே முன்வைத்தார். அதேசமயம் பாஸ்கள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அனுமதி பாஸ் இல்லாத ரசிகர்கள் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே சென்றனர். இதன் வீடியோ வெளியாகி இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இந்நிலையில் நேரு உள்விளையாட்டரங்கில் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களில் சிலர் ஆர்வம் மிகுதியால் விஜய் அமர்ந்திருந்த பகுதிக்கு செல்ல முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த பவுன்சர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் ரசிகர் ஒருவரின் சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்று வெளியே தள்ளும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சர்கார் பட ரீலிஸின் போது ரசிகர்கள் மீது நடத்த தாக்குதலை கண்டித்து, கடந்த 2019 ஆம் ஆண்டு பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில், தன் ரசிகர் மேல கையை வைக்காதீங்க. இல்லையென்றால்... என அப்போதைய அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியிருந்தார். ஆனால் இங்கே விஜய்யின் பட விழாவில் ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நியாயமா என சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், பவுன்சர்களுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.