இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே கடந்த சனிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மூலம் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் நேரு உள்விளையாட்டரங்கில் குவிந்தனர். இதில் சில ரசிகர்களுக்கு பாஸ் கிடைக்காத நிலையில் அவர்கள் தடையை மீறி உள்ளே வந்தனர். இதனால் அவர்களை தடுக்க முயன்ற போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே சென்றதால், போலீசாரில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
புத்தாண்டில் ஒளிபரப்பு:
நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அருகே பெரிய கலவரம் ஏற்ப்பட்டு, ஒருவழியாக அனைவரும் உள்ளே கூடினர். சரியாக 6 மணிக்கு எண்ட்ரி கொடுத்த விஜய், மேடையில் ஏறி பேசுவதற்கு இரவு 10 மணி ஆகிவிட்டது. இதற்கிடையே வரிசையாக ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு, வா தலைவா மற்றும் ஜிமிக்கு பொண்ணு ஆகிய பாடல்களை பாடி அசத்தினர்.
இந்நிகழ்ச்சியை நேரில் சென்று காணமுடியவில்லை என பலரும் வருதப்பட்டனர். அவர்களின் கவலையை போக்குவதற்காக, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகிற ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் தற்போது வெளியாகிவுள்ளது.
முதல் ப்ரோமோவில், நடிகர் விஜய் ரஞ்சிதமே பாடலை பாடி கொண்டு ஆடுகிறார். பின், செல்ஃபி வீடியோவை எடுத்த அவர், தனக்கு ட்வீட் செய்ய தெரியாது என்றும், அவரின் ட்விட்டர் அட்மினை அழைக்கட்டுமா என்றும் கேட்டார். இரண்டாவது ப்ரோமோவில், ராஷ்மிகா நடனமாடுகிறார். “எவ்வளோ க்யூட்டு.. ஐ லைக் யூ” என்று ராஷ் விஜயை பார்த்து கூறினார்.