திரையுலகை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோரின் வாரிசுகள் திரையுலகில் என்ட்ரி கொடுப்பது என்பது காலம் காலமாக நடக்கும் ஒன்று தான். ஆனால் அப்படி என்ட்ரி கொடுத்த அனைவராலும் திரையுலகில் ஜெயித்து விட முடியுமா? என்றால் அது சந்தேகம் தான். வாரிசு நடிகர்கள் என்ற அடையாளத்தோடு உள்ளே நுழைந்தாலும் அவர்கள் இந்த திரையுலகில் நிலைத்து நிற்க நடிப்புத்திறமை மிக மிக முக்கியம்.
நடிகை வரலட்சுமி:
அப்படி தன்னுடைய தனித்துவமான திறமையால் சினிமாவில் நல்ல ஒரு நிலையை எட்டியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அந்த வெகு சிலரில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல நடிகை என்ற அங்கீகரிக்கப்பட்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அக்மார்க் வில்லியாக பட்டையை கிளப்பும் வரலட்சுமி இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஹீரோயின் டூ வில்லி:
தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் சரத்குமாருக்கும் அவரின் முதல் மனைவி சாயாவுக்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். நடிப்பு பள்ளியில் பயின்று வரும் போதே பல நல்ல பட வாய்ப்புகள் அமைந்தும் அதை நிராகரித்த வரலட்சுமி, 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான 'போடா போடி' படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே நல்ல பாராட்டுகளையும் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதைத்தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அமைந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லியாக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.
விரைவில் திருமணம்:
தன்னுடைய திரைப்பயணத்தில் மிகவும் பிஸியாக இருக்கும் வரலட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்னர் தான் மும்பையை சேர்ந்த தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியது. வரலட்சுமிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.
கடந்த 12 ஆண்டுகளாக திரைத்துறையில் வெற்றிகரமாக பயணித்து வரும் வரலட்சுமியின் சொத்து மதிப்பு விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கு சுமார் 70 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 15 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி சேவ் சக்தி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் பல சமூக சேவைகளில் கடந்த 2020ம்ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், மருத்துவ உதவியை பெற இயலாதவர்கள் என பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை அமைப்பின் மூலம் செய்து வருகிறார் வரலட்சுமி .