தென்னிந்திய சினிமாவின் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான நடிகை வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய பர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்றது.
நிக்கோலஸ், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவை அனைத்திற்கும் தகுந்த பதிலடியை கொடுத்தார் நடிகை வரலட்சுமி.
தற்போது வரலட்சுமி சரத்குமார் திருமண அழைப்பிதழ்களை வழங்கும் பணியை குடும்பமாக சேர்ந்து செய்து வருகிறார்கள். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி, ராதிகா சரத்குமார், ராயனே மிதுன், பூஜா சரத், ரோஹித் என அனைவரும் முழு ஈடுபாட்டுடன் சந்தோஷமாக செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நேரடியாக சரத்குமார் குடும்பம் மொத்தமும் சென்று ரஜினிக்கும் அவரின் மனைவி லதாவுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர். அந்த அழகான புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"எங்கள் தலைவரையும் லதா ஆண்ட்டியையும் நேரில் சந்தித்து அழைத்தோம். எப்போதுமே அன்பாக இருப்பதற்கு நன்றி. ஐஸ்வர்யா உடன் இருந்தது இனிமையாக இருந்தது" என குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களை குவித்து வருவதுடன் கமெண்ட் மூலம் வரலட்சுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.