இந்திய திரையுலகில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வாராக ரூபம் பாடல் மீது விதித்திருந்த தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
திரையுலகினர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் காந்தாரா. கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிலையில் வசூலிலும் ரூ.400 கோடியை கடந்தது. காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது.
இதன் காரணமாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு காந்தாரா வெளியானது. இப்படம் நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. மேலும் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் தொடங்கி ஒட்டுமொத்த திரையுலகமே இப்படத்தை கொண்டாடியது.
ஓடிடியில் காந்தாரா:
திரையரங்குகளில் வெளியாகி பலரையும் கவர்ந்த காந்தாரா, நேற்று ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே மீண்டும நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், வாராஹ ரூபம் பாடலின்றி இப்படத்தை பார்க்க பலரும் விருப்பப்படவில்லை என்ற கருத்தும் நிலவி வந்தது. அந்த பாடல் நீக்கத்திற்கு காரணம், தைகுடம் பிரிட்ஜ் என்ற இசை குழு தங்கள் இசையை திருடிவிட்டதாக கூறி வழக்கு தொடர்ந்ததே
நடந்தது என்ன?
சில வாரங்களுக்கு முன்பு ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தைக்குடம் பிரிட்ஜ் பேண்ட் குழுவினர் கோழிக்கோடு மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மலையாள மொழியில் தனிப்பாடல்களை இயற்றி வரும் இந்த இசைக்குழு 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட நவரசம் பாடலின் காப்பிதான் வராஹ ரூபம் பாடல் என்பதால் காப்புரிமையை காக்க வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் அமேசான், யூடியூப், ஸ்பாடிஃபை, விங்க் மியூசிக், ஜியோ சவான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், தியேட்டர்களில் பாடலை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தனர். இதனால் இப்பாடல் அமேசான் பிரைமில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வராஹ ரூபம் பாடல் தடை நீக்கம்
இந்த நிலையில், வராஹ ரூபம் பாடலை படத்தில் கேட்காமல் தவித்துவந்த ரசிகர்களுக்கு இன்ப செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஆம், தைக்குடம் பிரிடஜ் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை கேட்டு தொடர்ந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தேவையான ஆவணங்கள் சமர்பிக்கப்படாத காரணத்தால் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக கூறியுள்ளது. இதனால், வராஹ ரூபம் பாடல் மீண்டும் படத்தில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் பழைய வராஹ ரூபம் பாடலில் இருந்த பின்னணி இசை இதில் இல்லை. மாறாக வேறொரு இசை சேர்க்கப்பட்டுள்ளது.