பிக்பாஸ் சீசன் 7:
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர்.
ஜோவிகா எவிக்சன்:
இந்நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ஜோவிகா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். நடிகை வனிதா விஜயகுமார் மகள் என்ற அடையாளத்துடன் உள்ளே நுழைந்த அவர் இந்த சீசனில் மிக குறைந்த வயது போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். வந்தது முதலே ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார். படிக்க சொல்லி அட்வைஸ் பண்ணிய விசித்ராவை திட்டியது, சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக பேசியது உள்ள பல பிரச்சினைகள் செய்தார். அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனாவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜோவிகாவின் 19 வயதை காரணம் காட்டி அர்ச்சனா பேசியதற்கு, போடி என அவர் திட்டினார். இதற்கு, பலமுறை கமலே அட்வைஸ் செய்ததும் நடந்தது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார். அதன்படி, ”பிக்பாஸ் குறித்த எனது ட்வீட்களை நீக்கி விட்டேன். ட்விட்டரில் எமோஷ்னல் ஆகக் கூடாது. குறிப்பாக ரியாலிட்டி ஷோ குறித்து பதிவிடுவதற்கு ட்விட்டரை பயன்படுத்த வேண்டியது அல்ல. எனவே, நான் ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து பதிவிடுவதை நிறுத்துகிறேன். பிக்பாஸ் லைவ்வை பார்ப்பதற்கு வெறுப்பாகவும், தொந்தரவாகவும் இருக்கிறது. பிக்பாஸ் லைவ்வை பார்க்காமல் இருப்பது நல்லது. பிக்பாஸ் ஒரு ஃபேக் டிராமா. இதுகுறித்து ரிவ்யூ கொடுக்கவும் மாட்டேன். ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வனிதா விஜயகுமார், பிக்பாஸ் குறித்து கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு டெலிட் செய்த நிலையில், எக்ஸ் தளத்தில் வீட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.