வனிதா விஜயகுமார் இயக்கியுள்ள 'மிஸஸ் & மிஸ்டர்'
வனிதா விஜயகுமார் எழுதி , இயக்கி , தயாரித்து , நடித்துள்ள படம் மிஸஸ் & மிஸ்டர். வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். தான் இயக்கிய முதல் படத்திலேயே அடல்ட் காமெடி ஜானரை இயக்க முயற்சி செய்துள்ளார் வனிதா . துணிச்சலான ஐடியாவாக இருந்தாலும் திரைக்கதை கதை , ஒளிப்பதிவு என பார்வையாளர்களை திரையரங்கை விட்டு ஓடவைக்கும் அளவிற்கு முதிர்ச்சியற்ற ஒரு படத்தை எடுத்திருக்கிறார் வனிதா.
மிஸஸ் & மிஸ்டர் விமர்சனம்
ராபர்ட் மற்றும் வனிதா கணவன் மனைவியாக நடித்துள்ளார்கள். 40 வயதை எட்டும் வனிதா தனது வயதை கொண்டு கவலை கொள்கிறார். அதே நேரத்தில் அவரை குழந்தை பெற்றுக் கொள்ள கன்வின்ஸ் செய்கிறார்கள். ஆனால் ராபர்ட் தனக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். ராபர்ட் ஏன் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். வனிதா குழந்தைப் பெற்றுக் கொண்டாரா என்பதே படத்தின் கதை.
குழந்தைப் பெற்றுக் கொள்வது குறித்தும் , வயது குறித்தும் , உடல் வயதாவது குறித்து பெண்களின் உளவியலை மிக எதார்த்தமான புரிதலோடு அனுகியிருக்கிறார் வனிதா. அடல்ட் காமெடி ஜானரில் சில துணிச்சலான விஷயங்களை ஹ்யூமராக முயற்சித்து பார்த்திருக்கிறார். இப்படத்தில் பாங்காக்கில் செட்டிலான தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தை காட்டுகிறார். பாங்காக் கலாச்சாரத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் விதம் , அவர்கள் அணியும் உடை என ஒரு புது கதையுலகத்தை காட்டியிருக்கிறார். ஒரு கிறுக்கு கொரியன் டிராமா பார்க்கும் ஒரு அனுபவத்தை மிஸஸ் & மிஸ்டர் படம் ஏற்படுத்துகிறது. இதெல்லாம் கதையில் இருந்தாலும் கதையின் ஓட்டம் மிக அலட்சியமாக கையாளப்பட்டிருந்தது. கடனுக்கு எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் சர்க்கஸில் இருந்து தப்பிய மிருகங்கள் போல கதை முழுவதும் கலவரம் செய்கிறார்கள். இரைச்சலான பாடல்கள் மற்றும் பின்னணி இசை , பழைய வெட்டிங் வீடியோவை விட சுமாரான ஒளிப்பதிவு என தொழில் நுட்ப ரீதியாக எந்த முதிர்ச்சியும் இல்லாமல் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.