Singer Vani Jayaram Death Live: விடை பெற்ற வாணி ஜெயராம்..! துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த வாணி ஜெயராம் இன்று நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்
வாணி ஜெயராமின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி வாணி ஜெயராமுக்கு விடை கொடுத்தனர்.
தகனம் செய்ய வாணி ஜெயராமின் உடல் மின் மயானத்திற்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டது.
மறைந்த பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதிச் சடங்கு செய்து வருகின்றனர்.
வாணி ஜெயராமின் உடல் கால பைரவர் சிலை முன்பு வைத்து இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.
வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்படுகிற பெசண்ட் நகர் மின் மயானத்தில் வாணி ஜெயராமின் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் மறைந்த பாடகி வாணி ஜெயராம் உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
துப்பாக்கி குண்டுகள் முழங்க மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு காவல் துறையினர் இறுதி மரியாதை செய்தனர்.
மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு காவல் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்தை நோக்கி வாணி ஜெயராம் உடல் இறுதி ஊர்வலம் செல்கிறது.
பெசன் நகர் மின் மயானத்தில் மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் திருமதி வாணிஜெயராம் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆணை
தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. படுக்கையில் அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்ததால் வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிப்பட்டது. நெற்றி காயம் மற்றும் மேசை விளிம்பில் ரத்த கறையை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வாணி ஜெயராம் வீட்டுக்கு வெளியில் இருந்து எந்த நபரும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. தடயவியல்துறை அறிக்கை, பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்க டிஜிபி-க்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கே பெருமை தேடி தந்தவர் வாணி ஜெயராம். அரசு மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு நடைபெற வேண்டும் - பாஜக தலைவர் அண்ணாமலை
பத்மபூஷன் விருதை பெறும் முன்னரே வாணி ஜெயராம் மறைந்தது வருத்தமளிக்கிறது - நேரில் அஞ்சலி செலுத்திய பின் முதலமைச்சர் முக ஸ்டாலின்
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக வாணி ஜெயராமோடு நல்ல உறவில் இருந்தேன். அவர் அடிக்கடி என் விவாதங்கள் மற்றும் பெண்ணியப் பணிகளைப் பாராட்டி வருவார். அவளுடன் நான் எடுத்த கடைசிப் படம் இதுதான் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வாணி ஜெயராம் குரல் ஒரு அற்புதமான குரல். இத்தனை வருடங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். அவரது மறைவு இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. நான் மழை என்ற ஒரு படத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் பாடல் ஒன்றை பதிவு செய்தேன். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட போது மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இப்படி நடந்து விட்டது. அவரது ரசிகர்கள் சார்பாக என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - இசையமைப்பாளர் இமான்
இந்த செய்தியை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மனது இறுகி கிடைக்கிறது.பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டபோது கடந்த வாரம் வாணி ஜெயராமிடம் பேசினேன். நான் பேசியபோது அவருக்கு குரல் இறுகி கிடந்தது. வழக்கமான குரல் இல்லை என கேட்டேன். பத்மாவதி கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அப்போது அவர் குரல் வழக்கமான குரல் மாதிரி இல்லை. அதுதான் அவரிடம் கடைசியாக நான் பேசிய பேச்சு - வைரமுத்து
இசைப்பாடல் என்பது மனச்சுமை மிக்க மனித உயிர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதில் பல வகையான இனிமையான குரல்களை தமிழக மக்களுக்கு சினிமா வழங்கியுள்ளது. மக்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிற குரல்களில் வாணி ஜெயராம் குரலும் ஒன்று. தமிழ் சினிமா அவரை அதிகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், அவர் அந்த இசைக்குரலில் நமக்கு பயன்பட்ட விதம் மறக்க முடியாதது. அவரின் இழப்பு மறக்க முடியாதது. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் என கவிஞர் அறிவுமதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாணி ஜெயராம் மறைவு செய்தி கேட்டு வருந்தினேன். அவரது மறைவு இசையுலகைப் பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். வாணி ஜெயராமை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வாணி ஜெயராம் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த அளவுக்கு வந்தார். அவர் இழப்பு இசைத்துறைக்கு பெரிய இழப்பு. - கங்கை அமரன் (இசையமைப்பாளர்)
வாணி ஜெயராம் இழப்பு இசைத்துறைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பெரிய இழப்பு. இன்னும் 1000 வருடங்கள் அவர் பாடலின் மூலம் நிலைத்து நிற்பார். - க்ரிஷ் பாடகர்
1945-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர்தான் வாணி ஜெயராம். இசைத்துறையை பின்னணியாக கொண்ட இந்த குடும்பத்தில் 9 குழந்தைகளில் 8-வது குழந்தையாக பிறந்த இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் அவர்கள் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது. இந்தியாவின் இதய கமலமாக, பத்மபூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட திருமதி வாணி ஜெயராம் அவர்களின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி! என பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Background
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த வாணி ஜெயராம் இன்று நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 78 வயதான அவருக்கு அண்மையில் மத்திய அரசின் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
வேலூரில் கலைவாணி என்ற இயற்பெயரோடு பிறந்த வாணி ஜெயராமின் குடும்பம் இசைப் பரிச்சயமும் பக்தியும் மிக்கது. கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்ற வாணிக்கு சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னா டே ஆகியோரின் பாடல்களைக் கேட்டு திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
பின்னர் சென்னை வந்து ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த அவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. வாணியின் இசை ஆர்வத்தை ஊக்குவித்த அவரது கணவர் ஜெயராம், வாணி உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தார்.
1971 ஆம் ஆண்டு குட்டி என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமான அவர், தமிழில் தாயும் சேயும் படத்தில் தனது முதல் பாடலை பாடினார். ஆனால் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் பாடி பிரபலமானார். வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருதுக்கான பட்டியலில் வாணி ஜெயராம் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பாக வாணி ஜெயராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தீர்க்க சுமங்கலி படத்தில் இடம் பெற்ற “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலை பாடியிருந்தார். மேலும் “இந்த வருடம் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது மிக மிக சந்தோஷம் அடைந்தேன்.
52 வருடங்களாக திரை இசைத்துறையில் 19 மொழிகளில் பாடி மிக நீண்ட பயணம் மேற்கொண்ட எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கு என்னுடைய பாடல்களை கேட்டு ரசித்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த விருதை அளித்து என்னை கௌரவப்படுத்திய மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியையும் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார். இதுதான் வாணி ஜெயராம் கடைசியாக பொதுவெளியில் பேசி வெளியிட்ட வீடியோவாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -