பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.


சர்ச்சைகளுக்கு நடுவே உருவான படம்


நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில், அவர் நடிக்க பாலா இயக்கவிருந்து, பின் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் அவர் விலக, நடிகர் அருண் விஜய் இணைந்து என, இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இயக்குநர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ், இயக்குநர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து இப்படத்தினைத் தயாரித்துள்ளது.



 


அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சென்ற ஆண்டு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு கையில் பிள்ளையார், மறு கையில் பெரியார் என நாயகன் அருண் விஜய் இடம்பெற்றிருந்த நிலையில் இந்தப் போஸ்டர் கவனமீர்த்தது. அதேபோல்  சென்ற மாதம் வெளியான டீசரிலும் ஆன்மீகவாதிகள், கன்னியாகுமரி கதைக்களம் கவனமீர்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.


ஷூட்டிங் நிறைவு


குறிப்பாக அருண் விஜய் பாலா படத்தின் வழக்கமான உக்கிரமான ஹீரோவாக அப்படியே மாறி இருந்த நிலையில், சூர்யாவிடமிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டார் என சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்தன. இந்நிலையில் வணங்கான் பட ஷூட்டிங் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.


சுரேஷ் காமாட்சி இதுகுறித்து பகிர்ந்துள்ள பதிவில், “அண்ணன் பாலாவிற்கு என் முழு முதல் நன்றி.  கடின உழைப்பைத் தந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றிகள். கேரெக்டருக்காக தன்னை வருத்திக் கொண்டு நடித்திருக்கும் நாயகன் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.


நாளைய சினிமாவில் நடிக்கத் தெரிந்த நாயகிகள் வரிசையில் சேர இருக்கும்  ரோஷிணி பிரகாஷூக்கும், மற்றொரு நாயகியான ரிதி ஃபாத்திமாவுக்கும், அன்பிற்கும் உழைப்பிற்கும் உரித்தான என் அன்பின் சமுத்திரக்கனி, இயக்குநர் மிஸ்கின் ஆகியோருக்கும், கடினமான நிகழ்வுகளை எப்போதும் எளிதாக்கும் மாஸ்டர் சில்வா ஸ்டண்டுக்கும் நன்றி.


அருண் விஜய் நெகிழ்ச்சி


பின்னணி உழைப்பில் பெரும் பங்களிப்பைத் தந்திருக்கும் அற்புதமான குழுவிற்கும் என் நன்றிகள். விரைவில் திரைக்கு வர உழைக்கிறோம். நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.


இதேபோல் நடிகர் அருண் விஜய் பகிர்ந்துள்ள பதிவில், “வணங்கான் ஷூட்டிங் நிறைவடைந்தது.  நன்றி பாலா சார், உங்களுடன் பணியாற்றியது எனக்கு மரியாதை மற்றும் பாக்கியம், உண்மையிலேயே விலைமதிப்பற்ற அனுபவம். என் இதயத்திற்கு மிக நெருக்கமான ஒரு படத்தில் ஒரு அசாதாரண பாத்திரத்தை முடித்த மகிழ்ச்சியை உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


 






மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைவு நாளில் எடுத்துக்கொள்ளப்பட்ட படக்குழுவின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். வணங்கான் திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.