இயக்குநர் பாலா




பாலாவின் சுயசரிதையை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம்  கலைக்கு எந்த வித தொடர்புமில்லாத ஒருவராக தான் பாலாவின் இளமை இருந்தது என்று. தேனி , மதுரை என தென் மாவட்டங்களில் வளரும் ஒரு சராசரி கிராமத்து இளைஞனாக தான் அவரின் இளமைப் பருவம் அடாவடித்தனங்கள் நிறைந்ததாக இருந்திருக்கிறது. சின்ன சின்ன அடிதடியில் இருந்து வெட்டுக்காயங்கள் வாங்கும்வரை. ஊரில் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்று பேசித்தான் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். இன்று தமிழ் சினிமாவில் வெகுஜன திரைப்படங்களை உளப்பூர்மவாக அனுகிய இயக்குநர்களில் பாலாவும்  ஒருவர்.


பாலாவின் முதல் படமான சேது படத்தை பெரும்பாலான விநியோகஸ்தர்கள் வெளியிட மறுத்துவிட்டார்கள். மிக குறைந்த திரையரங்குகளில் வெளியாகி படத்தைப் பற்றி மக்கள் பேசக் கேட்டு அடுத்த அடுத்த நாட்களில் கூட்டத்தை திரளவைத்தார் பாலா. சினிமாவில் பிரேக் தேடிக் கொண்டிருந்த விக்ரமின் கரியரில் மிகப்பெரிய படமாக அமைந்தது சேது.


அடுத்தபடியாக சூர்யாவுடன் நந்தா , பிதாமகன் , ஆர்யாவுடன் நான் கடவுள் , என வரிசையாக அவர் படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. எந்த வித கமர்ஷியல் அம்சமும் இல்லாத நான் கடவுள் மாதிரியான ஒரு படம் அவ்வளவு பெரிய மக்கள் திரளிடம் எப்படி ஆதரவை பெற்றது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியது. 


விளிம்பு நிலை மக்களின் கதைகளின் வழியாக எதார்த்தத்தின் கொடூரமான தன்மையை நேரடி சித்திரங்களாக காட்டக் கூடியவை இயக்குநர் பாலாவின் படங்கள்.


அதே நேரம்  மரணத்தை மனிதனின் முழுமையான விடுதலையாக ஏதோ ஒரு வகையில் முன்வைக்க முயல்கின்றன பாலாவின் படங்கள். பாலாவின் படங்களின் பொது அம்சங்கள் என இவற்றை கூறலாம்.


அழகற்றதின் அழகிய




பாலாவின் கதைக்களங்கள் பெரும்பாலும் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களைப் பற்றியதாகவே இருந்திருக்கிறன. நவீனமயமாகிக் கொண்டுவரும் உலகத்தில் வெளிச்சத்திற்கே வராத மனிதர்களின் கதைகளை தனது படங்களில் படம்பிடித்து காட்டுகிறார். மாற்றுத்திறனாளிகள், திருடர்கள், பினம் எறிப்பவர்கள், பஞ்சம் பிழைக்க பரதேசம் போனவர்கள், கூத்துக் கலைஞர்கள் என நாம் வாழ்நாளில் ஒரு நொடி அதிகம் சிந்தித்திராத மனிதர்களே பாலாவின் கதாநாயகர்கள். இவர்களின் வாழ்க்கையில் இருக்கும் வலி, கோபம் , நகைச்சுவை , கொண்டாட்டம் அனைத்தையும் தனது படங்களின் மூலம் மக்களை ரசிக்க வைத்திருக்கிறார். நாம் எதை அழகற்றது என்று முகம் சுளித்து நகர்கிறோமோ அதில் ஒரு அழகைக் காணக்கூடியக் கண்கள் பாலவினுடையது.


உண்மையைத் தேடும் படைப்பாளி


ஒரு பணக்காரன் மன நிம்மதியை தேடி அலைகிறான். ஒரு எழை நிம்மதி மற்றும் பணத்தைத் தேடி செல்கிறான். ஒடுக்கப்பட்ட ஒருவர் நீதியைக் கேட்டு நிற்கிறார். சமூக கட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விடுதலை உணர்வு தேவைப்படுகிறது. வன்மங்கள் நிறைந்த தனது கதைகளில் இருந்து அன்பென்கிற ஒன்றை முன்வைத்துக் கொண்டே இருக்கிறார் பாலா. உண்மை என்கிற ஒன்று ஒவ்வொரு மனிதனைப் பொருத்து மாறுபடும் போது  இதில் ஒன்று சரி ஒன்று தவறு என்று நம்மால் எப்படி முடிவு செய்ய முடியும்.   இந்த எந்த சமூக கட்டமைப்பிற்குள்ளும் வராத மக்களின் வாழ்க்கையில் என்றும் தீராத போராட்டம் ஒன்று இருந்து வருகிறது. இவர்களின் கதைகளை பேசும் பாலா அவர்களின் வாழ்க்கையில் இருந்து அந்த உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அது சில நேரங்களில் எதார்த்ததில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம் ஆனால் அந்த வாழ்க்கையின் நியாயங்கள் கொடூரமானவைதான் என்பதை பாலாவின் படங்கள் காட்டின.


உதாராணத்திற்கு நான் கடவுள் படத்தில் மாற்றுத்திறனாளியான ஹம்சவள்ளிக்கு அவளது மரணமே அவளுக்கு மோட்சம் அளிக்கக் கூடிய ஒன்று. ஒரு ஒட்டுமொத்த வம்சமே அடிமகளாகிப்போனதன் துயரம் தான் பரதேசி படத்தின் இறுதிக்காட்சி.


தன்னுடைய துன்பகங்களை பிறருக்கு கடத்துவதும் பிறருடையத் துன்பங்களை தனதாக உணர்ந்து அதில் இருக்கும் ஏதோ ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்து பொதுவில் வைப்பது மட்டும .பாலாவின் சமீபத்திய படங்கள் பெரியளவில் கவனம் பெறுவதில்லை. ஆனால் தொடர்ச்சியாக விவாதத்திற்கு உட்படுத்தக் கூடிய இயக்குநர்கள் பாலா இருந்து கொண்டே இருப்பார்.