தெலுங்கு இயக்குநரான வம்சி, விஜய்யை வைத்து வாரிசு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து இதுவரை உலகளவில் 210 கோடி ரூபாயை வசூலை குவித்துள்ளது.


வாரிசு படம் வெளியான பின்னர், பல யூடியூப் சேனல்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று வருகிறார். அதில் இயக்குநர் வம்சி, ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசியதாவது,  “விமர்சகர்களை நான் மதிக்காமல் இல்லை, ஆனால் இது ஒரு கமர்ஷியல் படம், ஆடியன்ஸ் என்ன விரும்புகிறார்களோ அதை தான் நான் படமாக எடுத்து வருகிறேன்.


படத்தை பார்த்து அதை விமர்சனம் செய்வது அவர்களின் வேலை, அதில் 100 விஷயங்களை அவர்கள் சொல்லலாம். வம்சி படம் இப்படி அப்படின்னு எழுதுகிறார்கள்,  நான் அதையெல்லாம் பார்பதே இல்லை. இந்த மாதிரி பெரிய நடிகர்கள் படம் வெளிவரும்போது பலர் கற்ப்பனையாக பல விஷயங்களை எழுதுகிறார்கள்.   படத்தை பார்த்து எல்லோரும் எழுந்து நின்றபோது, நானும் தமனும் கண் கலங்கிட்டோம். நான் சொல்வது ஒன்றுதான், முதலில் படம் வரட்டும். அதை முழுசா பாருங்க, எஞ்சாய் பண்ணுங்க.


உங்களுக்கு எல்லாம் ஒரு படம் எடுப்பது இன்னைக்கு எவ்வளவு  கஷ்டம் என்று தெரியுமா? எவ்வளவு பேரு ஒரு படத்தை உருவாக்க கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்று தெரியுமா? ரசிகர்களை எண்டர்டெயின் செய்ய எவ்வளவு உழைக்கிறோம் என்று தெரியுமா? இதெல்லாம்  காமெடி இல்லை.. ஒரு படத்தை உருவாக்க நிறைய தியாகம் செய்கிறோம். விஜய் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று தெரியுமா? எல்லா பாட்டிற்கும் அவர் ஒத்திகை  பார்த்துவிட்டுதான் ஆடுகிறார். ஒவ்வொரு வசனத்தையும்  அத்தனை முறை சொல்லி பார்ப்பாரு, உழைப்பு மட்டும்தான் நம்ப கையில் இருக்கு, முடிவு நம் கையில் இல்லை.


சீரியல்ஸ் என்றால் உங்களுக்கு எலக்காரமா இருக்கா? பல குடும்பங்களை அது தான் எங்கேஜிங்கா வைத்து இருக்கு அதுவும் கிரியேட்டிவான வேலை தான். ரொம்ப நெகட்டிவா இருக்காதீங்க.. இது ஒரு கமர்சியல் படம்... நான் பயங்கரமான படம் எடுத்து விட்டேன் என்றுலாம் நான் சொல்லவில்லை. நான் யாரென்று எனக்கு தெரியும்.” எனப் பேசியுள்ளார். 


இந்த வீடியோ பதிவின் கீழ், சில நபர்கள், “வம்சி திமிராக பேசியுள்ளார். ஹெச்.வினோத்தும்,  லோக்கேஷ் கனகராஜும்  பணிவானவர்கள். துணிவு படம் எடுத்தவரிடமிருந்து  கொஞ்சம் பணிவை கற்றுக்கொள்ளுங்கள் வம்சி” என பல விதமாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். 


அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் இடம்பெற்ற வார்த்தைகள் சில 


“ஒரு பொலுயுஷன்ல 10 மணி நேரம் ஆட்டோ ஒட்டுறவன் விடவா நாம கஷ்ட படுறோம்..” - ஹெச்.வினோத்


“நாங்க பயங்கரமா கஷ்டபடுறோம், வேலை பாக்குறோம் எல்லாமே சொல்லாம், ஆனா இறுதியில் கோடியில் சம்பளம் வாங்குறோம். ஆனா ஆப்போசிட் சைட்ல பார்த்தா 2000 ரூபாய் சம்பாதிக்கிறவன் கூட 200 ரூபாய படத்துக்கு எடுத்து வைக்குறான். அந்த உழைப்புக்கு இன்னும் மரியாதை இருக்குன்னு நினைக்கிறேன்.” - லோக்கேஷ் கனகராஜ்