வலிமை வெளியானதிலிருந்து கதை என்ன, விமர்சனம் என்ன என்பதை கடந்து, இன்னொரு விமர்சனம் கடுமையாக பரவி வருகிறது. அது... படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது தான்! உண்மையில் தொடங்கும் படத்தின் இசையமைப்பாளரும், பாடல்களை இசையமைத்தவரும் யுவன் சங்கர் ராஜா தான். முதலில் வெளியான ‛நாங்க வேற மாதிரி’ பாடலும், ‛அம்மா...’ பாடலுக்கும் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான். ஆனால் இடையில் என்ன ஆனது என்று தெரியவில்லை, திடீரென யுவன் சங்கர்ராஜா விலகிவிட்டார், ஓரங்கட்டப்பட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. 




ஆனால், அவை உறுதிபடுத்தப்படாத தகவலாகவே இருந்தது. வலிமை தொடர்பாக நாளிதழ் விளம்பரங்களில் இசையமைப்பாளர் என யுவன்சங்கர் ராஜா பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்கிறார்கள். இதற்கிடையில் அஜித்துடன் இசையமைப்பாளர் ஜிப்ரான் இருந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதை வைத்து, அஜித்தின் அடுத்த படத்திற்கு ஜிப்ரான் தான் இசை என கூறப்பட்டது. ஆனால், வலிமை படத்திலேயே ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார் என்கிற தகவலும் தற்போது பரவி வருகிறது. இது அதிகாரப்பூர்வ தகவலா எனத் தெரியவில்லை; ஆனால், அதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 


வலிமை படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலான ‛நாங்க வேற மாதிரி...’ பாடல் இடம் பெற்றிருந்தது. ஆனால், அம்மா பாடல் வர வேண்டிய இடத்தில், வேறு ஒரு அம்மா பாடல் வந்தது. அது இதுவரை வலிமை பாடல் என வெளியிடப்படாத பாடல். அந்த பாடல் குறித்து இதுவரை யுவன் எந்த அறிவிப்போ, தகவலோ தரவில்லை. அப்படியிருக்க, அந்த பாடலுக்கு சொந்தக்காரர் ஜிப்ரான் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பின்னணி இசையமைத்ததும் ஜிப்ரான் தான் என்கிறார்கள். இதன் காரணமாகவே, படத்தில் யுவன்சங்கர்ராஜா பெயர் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


யுவனுக்கும் வலிமைக்கும் என்ன பிரச்சனை? என்பது தெரியவில்லை; ஆனால் பிரச்சனை என்பதை உறுதி செய்ய முடிகிறது. படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், சமீபத்தில் படத்தின் ப்ரமோசனுக்கு பதிவிட்ட ட்விட்டர்களில், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் டேக் செய்த நிலையில், அதில் யுவன் பெயர் மிஸ்ஸிங். 






 


போதாக்குறைக்கு போனி கபூரின் பதிவை சமீபத்தில் ரீட்விட் செய்திருந்தார் யுவன். நேற்று படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் போட்ட யுவன் சங்கர் ராஜா, ‛வாழ்த்துக்கள் டீம்’ என்று தன் பதிவை தொடங்கியுள்ளார். 





இதை வைத்து பார்க்கும் போது, தயாரிப்பு தரப்பிற்கும், யுவனுக்கும் தான் பிரச்சனை என தெரிகிறது. ஆனால், என்ன பிரச்சனை, எதனால் பிரச்சனை என தெரியவில்லை. உண்மையிலேயே பிரச்சனை தானா என்பதும் தெரியவில்லை. யுவன் இசையமைத்த விசில் தீம் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. அதை தழுவிய தீம் தான் பயன்படுத்தப்பட்டது. பின்னணியில் பல இடங்களில் யுவனுக்கு என்று கூறப்படும் ஒரு வித மேஜிக் மிஸ்ஸிங் மாதிரி இருந்தது. அதற்கான பின்னணி மோசம் என்று அர்த்தமில்லை. யுவனின் அடையாளம் சொல்லும் அந்த மேஜிக் மிஸ்ஸிங். 


இந்த நிலையில் தான் வலிமையில் இடம் பெற்றுள்ள புதிய பாடல், பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுவரை அந்த பாடல் குறித்து யாரும் வாய் திறக்காத நிலையில், பலரின் வாயை திறக்க வைக்கிறது அந்த பாடல். அதற்கு சரியான விளக்கம் கிடைத்தால் தான் யுவன் பிரச்சனைக்கு தெளிவு பிறக்கும்!