அஜித்குமாரின் வலிமை வெளியாகி, தமிழ்நாட்டின் பெரும்பான்மை திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கிறது. படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக, இந்த படத்தில் அஜித் நிறைய அரசியல் சார்ந்த விமர்சனங்களை பேசியுள்ளார்.
தவறு செய்யும் தன் தம்பி மீது அஜித் நடவடிக்கை எடுக்கும் போது, அவர் மீது அக்கறை செலுத்த அவரது தாய் கோரிக்கை வைப்பார். அப்போது பேசும் அஜித், ‛சிஸ்டம் சரியில்லைன்னு... நாம தான் சொல்றோம்... ஆனா, நமக்குனு ஒரு விசயம் நடக்கும் போது, நமக்கு சாதகமா பேசுறோம்... சிஸ்டம்ங்கிறது யாரு? நாம தான் சிஸ்டம்...’ என்று அஜித் வசனம் பேசியுள்ளார்.
2017 ம் ஆண்டு மே 19 ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‛‛தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. சிஸ்டம் சரியில்லை... மொத்தத்தையும் சரிசெய்தால்தான் தமிழகம் உருப்படும்,’’ என்று பேசியிருந்தார்.அதன் பின் அவர் அரசியலுக்கும் வரவில்லை, சிஸ்டத்தையும் சரிசெய்யவில்லை. இந்நிலையில் தான், வலிமை படத்தில் சிஸ்டம் என்பது அரசியலோ அதிகாரிகளோ இல்லை, மக்கள் தான் என்கிற ரீதியில் அஜித் வசனம் பேசியிருக்கிறார்.
மறைமுகமாக இல்லாமல், நேரடியாகவே சிஸ்டத்திற்கு அஜித் புது விளக்கம் அளித்திருப்பது, ரஜினி கருத்திற்கு முற்றிலும் முரணாக உள்ளது. என்னதால் இயக்குனர் எழுதும் வசனமாக இருந்தாலும், அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்களுக்கு ஒப்புதல் இல்லாமல், எந்த வசனமும் சேர்க்கப்படுவதில்லை. முன்பு கூறியது போல, பொதுவாக இது போன்ற வசனங்களே அஜித் படத்தில் இருப்பதில்லை. ஆனால், இந்த முறை துணிந்து அரசியல் கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வசனம் மட்டுமல்லாமல் பல இடங்களில் அரசியல் சார்ந்த பல வசனங்கள் மறைமுகமாகவும், நேர்முகமாகவும் இடம் பெற்றுள்ளன. படம் வெளியாகியிருக்கும் இன்று, ரசிகர்களின் கூச்சலில் சில இடங்களில் வசனங்கள் கேட்க தவறலாம். ஆனால், நல்ல குவாலிட்டியான ஆடியோ சிஸ்டம் உள்ள தியேட்டர்களில் படத்தை பாக்கும் போது, அந்த வசனங்கள், பளீரென காதலில் விழுகின்றன. நான் தான் உனக்கு எதிரி என வில்லன் பேசும் போது, ‛எனக்கு எதிரியா இருக்கிறது அவ்வளவு சுலபம் அல்ல...’ என குளோசப் வசனம் பேசும் அஜித்தை, பல ஆண்டுகளுக்குப் பின் காண முடிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்