உலகெங்கும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். தமிழ் சினிமா தொடக்கம் முதல் தற்போது வரை காதலை மையமாக கொண்டே இயங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் காலத்திற்கும் அழியாத ஒரு தலை காதல் திரைப்படங்களின் பட்டியலை காணலாம்.
1. ஒரு தலை ராகம்:
ஒரு தலைக் காதல் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது ஒரு தலை ராகம் படமே ஆகும். டி.ராஜேந்தர் இயக்கத்தில் சங்கர், ரூபா நடிப்பில் 1980ம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. நாயகன் மீது காதல் வயப்பட்டாலும் அந்த காதலை சொல்லத் தயங்கும் நாயகி, இறுதியில் காதலைச் சொல்ல வரும் சூழலில் நாயகனுக்கு நிகழ்ந்த கதி என்ன? என்பதே கதை. கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கையை மிக அழகாக காட்டியிருப்பார் டி.ராஜேந்தர்.
2.பூவே உனக்காக:
இயக்குனர் விக்ரமனின் எவர்கிரீன் ப்ளாக்பஸ்டர் படம் பூவே உனக்காக. இந்த படத்தில் காதலனின் தனது காதலி வேறு ஒருவரை விரும்புகிறார் என்று தெரிந்தும், தனது காதலியின் காதலைச் சேர்த்து வைக்க என்ன செய்கிறார்? என்பதே படத்தின் கதை. இந்த படமே விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் படம் ஆகும். காதலியின் ஆசையை நிறைவேற்றுவதும் காதலே என்று மிக அழகாக இந்த படத்தில் காட்டியிருப்பார்கள்.
3.கனவே கலையாதே:
தமிழ் சினிமாவில் காதல் என்றாலே முரளியைத் தவிர்க்காமல் இருக்க முடியாது. 1999ம் ஆண்டு வெளியான கனவே கலையாதே படமும் மிகச்சிறந்த ஒரு தலைக்காதல் படம் ஆகும். நாயகன் முரளி நாயகி சிம்ரனை காதலித்து இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சிம்ரன் உயிரிழக்கும் சூழலில் சிம்ரன் தோற்றத்தில் இருக்கும் ஒருவரை முரளி சந்திக்கிறார். பின்னர், அந்த சிம்ரனுக்கும், முரளிக்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் நடக்கும் அதிர்ச்சி என்ன? என்பதே படத்தின் கதை. இந்த படமும் இன்றளவும் சிறந்த ஒருதலைக் காதல் படம் ஆகும்.
4.இதயம்:
தமிழ் சினிமாவில் ஒரு தலைகாதல் படங்கள் வரலாற்றை இதயம் படத்தை தவிர்த்து எழுதவே முடியாது. கதிர் இயக்கிய இந்த படம் 1991ம் ஆண்டு வெளியானது. மருத்துவ மாணவன் தனது உடன்படிக்கும் மாணவியை காதலிக்கும் சூழலில் தனது காதலைச் சொல்ல முடியாமல் தயங்கியே மருத்துவ படிப்பு முடியும் சூழலில், நாயகியிடம் நாயகன் காதலைச் சொன்னாரா? நாயகி காதலை ஏற்றாரா? இறுதியில் நடந்தது என்ன? என்பதை சோகமான முடிவுடன் அளித்த படமே இதயம் ஆகும். முரளி காதல் நாயகனாகவே வாழ்ந்திருப்பார். ஹீராவும் தனது நடிப்பால் அசத்தியிருப்பார்.
5.ஷாஜகான்:
ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுப்பதற்கு முன்பு காதல் நாயகனாக உலா வந்த விஜய்யின் ஹிட் படம் ஷாஜகான். இவரது நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான ஷாஜகான் படம் இன்றும் கொண்டாடப்படும் ஒருதலைக்காதல் படம் ஆகும். இந்த படத்தில் விஜய் நேசித்த பெண் தனது நண்பனின் காதலி என்று தெரிந்த பின்பு அவர் எடுக்கும் முடிவு என்ன? என்பதே படத்தின் கதை. ரவி இந்த படத்தை இயக்கியிருப்பார்.
6.இயற்கை:
கோலிவுட்டின் சிறந்த ஒரு தலைக்காதல் படங்களில் இயற்கையை தவிர்க்க முடியாது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படமான இயற்கை காதலனுக்காக பல வருடங்கள் காத்திருக்கும் நாயகி மீது காதல் கொள்ளும் நாயகனை காதலி நேசிக்கும் வேளையில், திடீரென அவளது காதலன் மீண்டும் திரும்பும் வேளையில் இறுதியில் நடப்பது என்ன? என்பதே படத்தின் கதை ஆகும். ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா படத்தின் தூணாக இருந்திருப்பார்கள். இன்றும் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதை ரணமாக்கும் விதத்தில் இருக்கும்.
7.பொக்கிஷம்:
தமிழ் சினிமா ஏராளமான ஆண்களின் ஒரு தலைக்காதலை பேசியிருக்கும். ஆனால், ஒரு பெண்ணின் ஒரு தலைக் காதலை சொன்ன படம் பொக்கிஷம். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் சேரன் இ்யக்கிய பொக்கிஷம் படம் ஒரு இந்து இளைஞனுக்கும், இஸ்லாமிய பெண்ணுக்குமான காதலை அழகாக சொன்ன படம். இறுதிவரை தனது காதலனை நினைத்துக் கொண்டு திருமணம் செய்யாமலே வாழும் பெண்ணின் வலியைச் சொன்ன படம் இதுவாகும்.
8. 7ஜி ரெயின்போ காலனி:
2004ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படம் தமிழ் சினிமா காலத்திற்கும் கொண்டாடி வரும் படம் ஆகும். நாயகியை போராடி தன்னை காதலிக்க வைக்கும் இளைஞனும், அவர்களது காதல் நாயகி வீட்டில் தெரிந்த பின்பு நடக்கும் இன்னல்களும், இறுதியில் மனதை உலுக்க வைக்கும் சம்பவமுமே படம் ஆகும். யுவன்சங்கர்ராஜா இசையில் படம் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும்.
9. மதராசப்பட்டிணம்:
சுதந்திர காலத்தில் ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாத தமிழக இளைஞனுக்கும், ஆங்கிலேய அதிகாரியின் குடும்பத்தைச் சேர்ந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கும் நடக்கும் காதலே மதராசப்பட்டிணம். மிக அழகாக யதார்த்தமாக நகரும் இந்த காதல் படம் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடப்படும் படமாக உள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு மனதில் நீங்காத வகையில் படமாக்கப்பட்டிருக்கும். 2010ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருப்பார். எமிஜாக்சன், ஆர்யா இந்த படத்தில் நடித்திருப்பார்கள்.
10. விண்ணைத் தாண்டி வருவாயா:
2010ம் ஆண்டு வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. சிம்புவின் திரை வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம். உதவி இயக்குனர் கார்த்திக்கும் மலையாள கிறிஸ்தவ பெண்ணான ஜெஸ்ஸிக்கும் இடையே நடக்கும் காதல் கதையே படம். மிக யதார்த்தமாக படத்தை தனது திரைக்கதையால் கெளதம் மேனன் நகர்த்தியிருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசை படத்திற்கு உயிர் சேர்த்திருக்கும்.
11. கும்கி:
பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படம் ஆகும். விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமான இந்த படமானது யானை பாகனுக்கும், மலைவாழ் கிராம பெண்ணுக்கும் நடக்கும் காதலை மையமாக கொண்ட படம் ஆகும். மிகவும் வலியான முடிவுடன் இந்த படம் முடிந்திருக்கும். 2012ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு இமானின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும்.