சினிமா என்பது காலம் காலமாக காதலை சுற்றியே நகர்கிறது என்றால் அது மிகையல்ல. எத்தனை விதமாக காதல் படங்கள் வெளிவந்தாலும் அவை இன்றும் புது புது அகராதியுடன் வெளிவந்த வண்ணமாகவே இருக்கிறது. அப்படியாகப்பட்ட காதல் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த ஒரு சில 'காதல்' இயக்குநர்களை பற்றிய ஒரு தொகுப்பு :


ஸ்ரீதர் :


இமயம், சிகரம் அனைத்தையும் கடந்த வானம் தான் இயக்குநர் ஸ்ரீதர் என சொல்லலாம். அந்த அளவுக்கு அவரின் நிழலில் இளைப்பாறியவர்கள் தான் அவருக்கு பின்னர் வந்த இயக்குநர்கள். அவருக்கு இருந்த இளமையும் வேகமும் இன்று இருபவர்களுக்கு சற்று குறைவுதான். 30 ஆண்டுகளுக்கும்  மேலாக திரையுலகில் ஆதிக்கம் செய்தவர். முக்கோண காதல் கதையின் மன்னன். 



பாரதிராஜா :


இயக்குநர் ஸ்ரீதருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு  நகர்த்தியவர் இயக்குநர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனை வீசும் அவரின் படங்களில் காதலின் மனமும் நிச்சயம் வீசும். கிராமத்து காதலை மிகவும் அழகாக வெள்ளந்தியாக காட்டி நெகிழ்ச்சி அடைய செய்துவிடுவார். அலைகள் ஓய்வதில்லை, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் நிறம் மாறாக பூக்கள், காதல் ஓவியம், கடலோர கவிதைகள் என அவரின் காதல் காவியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 



கே. பாலச்சந்தர் :


திரையுலகின் அகராதி கே. பாலச்சந்தர். நடிகர்களை அடையாளம் காட்டி படத்தை நினைவில் கொள்ளும் ட்ரெண்ட் இருந்த காலகட்டத்தில் இது பாலச்சந்தர் படம் என்ற அடையாளத்தை முத்திரை பதித்தவர். இந்த தமிழ் சினிமாவுக்கு அதிக அளவிலான நடிகர்களை அறிமுகப்படுத்தியது அவராகவே இருக்கும். உணர்ச்சிகள் ததும்ப ததும்ப இருக்கும் அவரின் படங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு திரை விருந்து. அனைத்து எமோஷன்களையும் ஆழ்மனதில் இருந்து வெளி கொண்டு வரும் பாலச்சந்தர் காதலை மட்டும் விடுவாரா என்ன? புன்னகை மன்னன், மனதில் உறுதி வேண்டும், அழகன், வானமே எல்லை, டூயட், பார்த்தாலே பரவசம், கல்கி, ஜாதி மல்லி என அடுக்கி கொண்டே போகலாம். 


மணிரத்னம் :


தென்னிந்திய சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் காதல் படங்களில் ஒரு ஜாம்பவான். அவரின் காதல் கதைகள் சற்று வேறுபட்டு இருப்பது அவரின் தனிச்சிறப்பு. இதயக் கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே,குரு, ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என அவரின் காதல் படங்களின் லிஸ்ட் மிக பெரியது.



கௌதம் மேனன் :


இன்றைய காலகட்டத்திற்கும், இன்றைய இளைஞர்களின் பல்ஸ் அறிந்த ஒரு இயக்குநர் கௌதம் மேனன். இன்று அதிரடி, திரில்லர், ஆக்ஷன் படங்களை பெரும்பாலும் விரும்பும் ரசிகர்களுக்கு காதலை சொட்ட சொட்ட கொடுத்த ஒரு இயக்குநர். மின்னலே, விண்ணை தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், படங்கள் அவருக்கு பெஞ்ச் மார்க் செட் செய்தது. 


கதிர் :


90'ஸ் இளைஞர்கள் கொண்டாடிய ஒரு இயக்குநர் கதிர். அவரின் காதலர் தினம், காதல் தேசம் என இரண்டே படங்களில் மூலம் அனைத்து காதலர்களை தன வசமாக்கினார். அட காதலிப்பது இத்தனை சுகமானதா என்பதை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்திய ஒரு இயக்குநர். 


எழில் :


ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் எழில். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார்.