இன்றும், என்றும் மறக்கமுடியாத இசை தம்பதி, ‛புஷ்பவனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி’. கருப்பு-வெள்ளை காதல் தம்பதிகளாய் இன்றும் மலர்ந்த முகத்தோடு வலம் இவர்களின் காதல் கதை ரொம்ப சுவாரஸ்யமானது. சேட்டு வீட்டு பெண்ணை, தன் வீட்டுக்கு அழைத்து வந்தது எப்படி? தம்பதி சகிதமாய் அவர்கள் அளித்த பேட்டி ஒரு ரீவைண்ட்!
புஷ்பவனம் குப்புசாமி பேட்டி...
‛‛இளமை பருவம் கஷ்டத்தில் தான் போச்சு. படிக்கிற காலத்தில் 20 கி.மீ., தூரம் நடந்து படிச்சவன். அது ரொம்ப கஷ்டமான காலம். அதன் பிறகு தஞ்சாவூரில் கல்லூரியில் படித்தேன். அதுவும் கஷ்டமான சூழல் தான். கல்யாணம் ஆன பிறகு தான் மனிதனாக இருக்கிறேன்.
சென்னை பல்கலைகழகத்தில் தான், நானும் அனிதாவும் சந்தித்தோம். இசைத் துறை இருக்கா என்று கேட்டேன். அங்கு அனைவரும் பெண்கள் தான் படிக்கிறார்கள். ஒரு ஆண் கூட இல்லை. 3 மாதம் கழித்து என்னை சேர கூறி அழைப்பு வந்தது. அதன் பிறகு வகுப்பில் சந்தித்தோம். அனிதா அணிந்து வரும் செருப்புக்கு ஏற்றார் போல பூ வைப்பவர். அந்த அளவிற்கு கல்லூரிக்கு வருவார்.
கல்லூரியில் நடந்த இசை விழாவில், என் குரலுக்கு அனிதாவின் குரல் எடுக்கும் என இணைந்து பாட வைத்தார்கள். நாளடைவில் நாங்கள் சேர்ந்து பாட ஆரம்பித்தோம். ‛அந்த பாடுதுல ஒரு பொண்ணு... அதை தான் குப்புசாமி கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்’ என புரளி கிளம்பியது. என் தாயே என்னிடம் கேட்டார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மானு சொல்லிட்டேன். ‛டே... அதெல்லாம் சேட்டு பொண்ணு... நமக்கு வேணாம்டா...’ என்று அம்மாவும் கூறினார். அதுவரை எனக்கும் அந்த மாதிரி எண்ணம் இல்லை.
ஒரு நாள், நான் விளையாட்டுக்கு காதலிக்கிறேன் என்று அனிதாவிடம் கூறினேன். ஒரு சொம்பை எடுத்து ஒரே அடியாக அடித்துவிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அப்போது தான், எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நாம என்ன அவ்வளவு மோசமாகவா போய்விட்டோம் என்று. ‛ஏன்... என் நிறத்தை பார்க்கிற... என் திறமையை பார்க்க மாட்டீயா...’ என்று கேட்டேன், ‛போய் மூஞ்சிய பாரு...’ என்று போய்விடடார். அப்புறம் தான், எனக்குள் இவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அது நடந்தும் முடிந்தது,’’ என்கிறார் குப்புசாமி.
அதே பேட்டியில் அனிதா குப்புசாமி கூறுகையில்,
‛‛நான் வடநாட்டைச் சேர்ந்தவர். 7 அக்கா, தங்கைகள் எங்கள் வீட்டில். ஆண் வாரிசு எங்கள் வீட்டில். பெரிய குடும்பம் என்னோடது. கூட்டு குடும்பமாக இருந்தோம். குடும்பம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். ரொம்ப ஜாலியா இருப்போம். கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாது. கோவை மேட்டுப்பாளையத்தில் தான் நான் படித்தேன். என் குரல் நன்றாக இருக்கும் என என் ஆசிரியர்கள் என்னை கொண்டாடினார்கள். அவர்கள் தான் என்னை அடையாளம் கண்டுபிடித்தார்கள். 8ம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் செய்தார். நான் அவரை மறுத்துவிட்டேன். பின்னர் அவரை, என் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
கோவையில் பி.ஏ., இசை படிக்க போனேன். 3 வருடமாக நான் ஒரே மாணவி தான். எனக்கு 3 பேராசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். பின்னர் சென்னை பல்கலையில் அவரை சந்தித்தேன். குரல் தான் எங்களை சேர்த்து வைத்தது,’’ என அனிதா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்