தமிழ் திரையுலகில் பேசப்பட்ட காதல் ஜோடிகளில் ஒருவர், ரகுவரன்-ரோகினி தம்பதி, ரகுவரன் மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றும் வாழும் கலைஞன். அவருடன் வாழ்ந்த, வாழ எடுத்த முடிவுகள் குறித்தும், அதற்கு காரணமான காதல் குறித்தும், அவரது காதல் மனைவியான ரோகினி அளித்த பேட்டி ஒன்றை ரீவைண்ட் செய்கிறோம்.




‛‛நான் முதன் முதலில் கதாநாயகியாக நடித்த கக்கா என்ற மலையாளர் படத்தில் தான், ரகுவரனை சந்தித்தேன். அப்போதே எங்களுக்குள் பப்பி காதல் இருந்தது. என் முதல் ஹீரோ, என் முதல் காதல் அது. எனக்கு 16 வயது தான், அவருக்கு 24 வயதிற்கு மேல் இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு தான் எங்கள் திருமணம் நடந்தது . இடைப்பட்ட 13 ஆண்டுகள், எங்களுக்குள் காதல் இருந்தது. 


முதல் சந்திப்பின் போது, நான் சிறுமி. அவர் கொஞ்சம் பக்குப்பட்டவராக இருந்தார். அவர் தான் முதன் முதலில் காதலை சொன்னார். அவர் அதிகம் பேசமாட்டார். அவரும் நிழல்கள் ரவியும் தான் அதிகம் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. அப்போது அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவரது வேலையை பார்க்கும் போது தான், அவர் சிறந்த நடிகர் என தெரிந்தது. 


அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவரை சந்திக்க நினைத்தேன். அவர் ரொம்ப அமைதியானவர். கனகச்சிதமாக நடிக்கக் கூடியவர். செட்டுக்கு வரும் போது தான் அவரை பார்க்கிறார்கள். அவர் அணிந்திருக்கும் கண்ணாடி, சட்டை, கோர்ட் உள்ளிட்ட அனைத்துமே, இயக்குனர் கதையை சொன்னபிறகு, அந்த கதாபாத்திரமாகவே அவர் வீட்டில் வாழ்வார். அது யாருக்கும் தெரியாது. உடன் இருக்கும் எனக்கு மட்டும் தான் அவரது முயற்சிகள், பயிற்சிகள் தெரியும். 


முதல்வன் படத்திற்காக அவ்வளவு மெனக்கெட்டார். ஒரு காட்சிக்கு 3 போட்டோ ஷூட் எடுப்பார். தன் வாழ்க்கையில் சந்தித்தவர்களை ரெபரன்ஸ் ஆக எடுப்பார். நான் சினிமாவில் இருந்ததால், அவரது முயற்சிக்கு உதவுவேன். கல்யாணம் ஆன புதிதில், கொடூரமாக பேசிக் கொண்டிருந்தார். எனக்கு எதுவுமே தெரியவில்லை. அவரது அம்மா தான் கூறினார், ‛அவன் என்ன கேரக்டர் செய்கிறான்..’ என்று கேளு என்றார். அப்போது தான் அவரை பற்றி எனக்கு தெரிந்தது. கதாபாத்திரமாக வீட்டிலும் வாழ்வார். 


அவர் அதிகம் பேசாதவர் தான்; ஆனால் வீட்டில் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால், அது அவர் எடுத்துள்ள கேரக்டராக இருக்கும். உட்காரவே மாட்டார். நடந்து நடந்து பேசிக் கொண்டே இருப்பார். நாங்கள் நட்பில் இருந்த போது, மனம் திறந்து பேசி தான் திருமணம் செய்து கொண்டோம். பிரிவு எல்லோருக்கும் நடக்கும். என் அண்ணன்கள் கூட நான் சண்டை போடுவேன். எல்லோருக்குள்ளும் கருத்து வேறுபாடு வரும். 


எங்கள் கருத்து வேறுபாடு, எங்களை கடந்து எங்கள் மகனை பாதித்தது. அவனுக்காக தான் நாங்கள் பிரிந்தோம். ரிஷி(மகன்) தான் எங்கள் வாழ்வின் அடையாளம். முதன் முதலில் ரகு தான் அவனை காட்டினார். கண்ணீரோடு அவனை பார்த்தேன். அவரை அவனாக தான் பார்க்கிறேன்,’’ என்று கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண