ஒரு பாடலில் இசை பெரிதா மொழி பெரிதா என்பது பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது என பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து (Vairamuthu) தெரிவித்துள்ளார்.


செல்வம் மாதப்பன் இயக்கத்தில், பிரஜின் ஹீரோவாக நடித்துள்ள படிக்காத பக்கங்கள் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட பாடலாசிரியர் வைரமுத்து பேசியதாவது:


இசை பெரிதா, மொழி பெரிதா


“இது என் 44ஆவது ஆண்டு. இந்த 44ஆவது ஆண்டில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் ஒரு பாடலாக படிக்காத பக்கங்களில் இந்த சரக்கு என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். இதுதான் நான் இன்னும் இயங்குவதற்கு காரணம். ஒரு படத்தின் பெயர் மறந்து போகிறது. நடிகன் பறந்து போகிறான். நடித்த நடிகைகள் மறக்கப்படுகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் தொலைந்து போகிறது. தயாரித்த நபர் மறக்கடிக்கப்படுகிறார். பாட்டு மட்டும் நிற்கிறது.  


“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாட்டை இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, பாடியவர் டி.எம்.எஸ், பாடலை எழுதியவர் மக்கள் அன்பவன், நடித்தவர் எம்.ஜிஆர், குதிரையில் இருந்தவர் பானுமதி என இந்த உலகம் நினைத்துக் கொண்டே இருக்கும்.  இசையால் ஒரு சமூகம் இணைக்கப்படும்.


புரிந்து கொள்பவன் ஞானி..


ஒரு பாடலில் இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதில் என்ன சந்தேகம், இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ, இசை அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான் அதற்கு பாட்டு என்று பெயர். ஆனால் சில நேரங்களில் இசையை விட மொழி பெரியதாகவும், மொழியை விட இசை பெரியதாகவும் திகழுகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.  புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி.


பாட்டுக்கு பெயர் வைப்பவன் யார்? பிறந்து ஒரு 20 நாள்களில் பெயர் வைக்கிறார்கள். பெயர் வைக்கவில்லை என்றால் என்ன? பெயர் வைத்ததும் தான் அவர்கள் வாழ்வு அவர்களைச் சார்கிறது. அவர்கள் உரிமை அவர்களைச் சார்கிறது. சம்பவங்கள், உணவு அவர்களை சார்கிறது. பெயர் தான் பட்டா, பத்திரம், சொத்து, அதாரம். பாட்டுக்கு பெயர் வைப்பது இசையா, மொழியா..


பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி


“மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” என்ற பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, மன்மத லீலையை வென்றார் உண்டோ ஆகிய பாடல்களுக்கு பெயர் வைத்தது மொழி. அதற்கு அழகு செய்தது இசை. அபிநயம் செய்தது இசை. சுகம் கொடுத்தது இசை. ஆனால் அந்தப் பாட்டுக்கு பெயர் சூட்டியது மொழி. அந்தப் பாடலை அழைக்க வைத்தது மொழி. ஒரு பாடலை ஹம் செய்து பாடுங்கள் என யாராவது சொல்வார்களா? மொழிக்கு உரிய மரியாதையை இசையும், இசைக்கு உரிய மரியாதையை மொழியும் பரஸ்பரம் வழங்குகிற போதுதான்,  கலை வெற்றி பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன்” எனப் பேசியுள்ளார்.


இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணை


தமிழ் சினிமாவின் இசைஞானியாகக் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja), ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தன் பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் மீது முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தார். முதலில் இளையராஜாவுக்கு தன் பாடல்கள் மீது தனிப்பட்ட சிறப்பு உரிமை இருப்பதாகவும், பாடல்களை இசை நிறுவனம் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தொடர்ந்து எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், “பாடல் வரிகள் பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்குப் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என்று நீதிபதிகள் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 2ஆம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது