அஜித் பிறந்தநாள்
நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரு படங்களை கையில் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் தற்போது வர இருக்கும் அஜித் பிறந்தநாளன்று திரையரங்கில் கொண்டாடுவதற்கு அஜித் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு படம் வேண்டுமே
வரும் மே 1ஆம் தேதி நடிகர் அஜித் தனது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு அஜித் நடித்த பில்லா மற்றும் தீனா ஆகிய இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்த இரண்டு படங்கள் வெளியானாலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பது வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படத்தின் ரீரிலீஸ் தான்.
மங்காத்தா ரீரிலீஸ்
அஜித் குமார் நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. த்ரிஷா, பிரேம் ஜி, மகத், அர்ஜூன், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் மாஸான பி.ஜி.எம் மற்றும் பாடல்களைக் கொடுத்தார். இவை எல்லாவற்றுக்கும் மேல் அஜித்தின் 50ஆவது படமாக வெளியானது மங்காத்தா. சமீபத்தில் விஜய் நடித்த கில்லி படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் தங்கள் பலத்தை காட்டியுள்ளக் நிலையில் அஜித் ரசிகர்களும் திரையரங்கத்தை அலறவிடத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
மங்காத்தா படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யும்படி ரசிகர்கள் அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தன் தரப்பில் இருந்து எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டதாகவும் அப்படம் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவானது என்பதால் படத்தை வெளியிடுவது அவர்களின் கையில் தான் உள்ளது என்று வெங்கட் பிரபு தற்போது தெரிவித்துள்ளார். ஆனால் சன் பிச்சர்ஸ் சார்பாக படத்தை வெளியிடுவதற்கான எந்தவிதமான முனைப்பும் தெரியாததால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக ட்வீட் செய்து வருகிறார்கள்.