காவிரி ஆற்றின் பாலத்தில் நின்று கவிப்பேரரசு வைரமுத்து கவிதை சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் மொழியின் புலமையால் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகை ஆண்டு வருபவர் வைரமுத்து. அவர் பெயரை சொன்னாலே வெள்ளை ஜிப்பாவும், அவரின் தமிழும் தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்னும் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பயணப்பட்டவர் தற்போது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் கூட்டணியில் இருந்த அவர் பின்னாளில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்ததால் தான் தன்னுடைய தமிழ் சர்வதேச எல்லைகளை கடந்ததாக தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு இவரது பாடல் வரிகள் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதில் காதல் ரசனையுடனே எழுதப்பட்டிருக்கும். முதல் மரியாதை, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால்,ரோஜா, தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை ஆகிய படங்களின் பாடல்களுக்காக வைரமுத்து தேசிய விருதும் வென்றுள்ளார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் பாட்டெழுதி தன்னை புதுப்பித்துக் கொண்டே வரும் வைரமுத்து தற்போது திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் காவிரி நீரை பார்த்து கவிதை ஒன்றை வார்த்துள்ளார். திருச்சி
காவிரிப் பாலம் நில்லாமல் ஓடும் காவிரியில் நின்றெழுதிய கவிதை என்ற கேப்ஷனில் இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாய்ந்தோடும் காவிரியே..எங்கள் பரம்பரையின் தாய்ப்பாலே...வரலாற்றின் இரத்தமே..எங்கள் வயல்களில் துறவ சாப்பாடே...பல்லாண்டு தாண்டி நீ பெருக்கெடுத்து ஓடுவதாய் கேள்விப்பட்டு நான் கிறுக்கெடுத்து ஓடி வந்தேன்...கரிகாலன் கால் நனைத்தது நீதான்.. கவிஞர்களின் மீது திரவ முத்துக்கள் தெளித்தது நீதான்...ராஜராஜ சோழனின் வாள் முனையை...உழவனின் ஏர்முனையை தீட்டித் தந்தவள் நீதான்...
கரைதொட்டு பாய்ந்தோடும் காவிரியே...உன் அழகில் பறை கொட்டி பறை கொட்டி பாவி மனம் கூத்தாடும்..உடலோடு சேர்ந்தோடும் உயிர் உதிரம் நீ தாயே...கடலோடு சேராமல் கலனிகளில் சேர்வாயே...மலைத்தலய கடற் காவிரியே என கடியலூர் உருத்திரங்கண்ணன் முதல் காவிரி தாயே..காவிரி தாயே..காதலர் விளையாட பூவிரித்தாயே என கண்ணதாசன் வரை ஈராயிரம் ஆண்டுகளாய் ஓராயிரம் புலவர்களுக்கு பாடுபொருளாகியா பால் நதியே...நீ யாரோ இட்ட பிச்சை அல்ல...எங்கள் உரிமை...நீ அரசியலின் ஆசீர்வாதம் அல்ல...எங்கள் அதிகாரம்..உன் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம்...அணைக்கட்ட விட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.