கோவா விமான நிலையத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை இந்தி தெரியாததால் விமர்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவா விமான நிலையத்தில் சென்னைக்கு செல்வதற்காக ஷர்மிளா ராஜசேகர் என்ற பயணி கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி இரவு பாதுகாப்பு சோதனைக்காக நின்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஷர்மிளாவிடம் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு தனக்கு இந்தி தெரியாது என ஷர்மிளா தெரிவிக்க, எங்கிருந்து வருகிறீர்கள் என அந்த பாதுகாப்பு வீரர் கேட்டுள்ளார். அதற்கு தமிழ்நாடு என இவர் பதிலளிக்க, இந்தியாவில் தானே தமிழ்நாடு இருக்கிறது. அதனால் இந்தி தெரிந்திருக்க வேண்டும். அதுதான் இந்தியாவின் தேசிய மொழி’ என தெரிவித்துள்ளார்.
அதற்கு ஷர்மிளா, ‘இந்தி தேசிய மொழி இல்லை. அலுவலக மொழி’ என பதிலளித்துள்ளார். மேலும் கூகுளில் தேடி பார்த்தும் அந்த பாதுகாப்பு படை வீரரிடம் காட்டியுள்ளார். இந்த பிரச்சினையை அந்த விமான நிலையத்தில் பயணித்த சிலரும் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஷர்மிளா இதுகுறித்து இமெயில் மூலம் புகாரளித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணிடம் இந்தி தெரிந்து கொள்ள வேண்டும் என அந்த பாதுகாப்பு படை வீரர் சொன்ன விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?
இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா?
எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா?
இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தெள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா? சிறுநாடுகளும்கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியாள முடியுமா?
22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவதுதான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு” என தெரிவித்துள்ளார்.