சினிமா, சின்னத்திரை மட்டும் இல்லாது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ள விஷயம் இயக்குநரும் நடிகருமான ‘எதிர் நீச்சல்’ புகழ் மாரிமுத்துவின் தீடீர் மரணம்தான். எதிர்நீச்சல் தொடருக்காக இவர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு திரும்பியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். 


கையெழுத்தை பார்த்து வியந்தேன்:


இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மூத்த கவிஞரான வைரமுத்து ஏபிபிநாடுவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மறைந்த நடிகர் மாரி முத்துவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், ஒருநாள் மாரிமுத்து என்னை வந்து சந்தித்து, உங்களுடன் நான் பணியாற்றுகிறேன், எனக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டார். நான் உனக்கு என்ன தெரியும் எனக் கேட்டேன். அதற்கு மாரிமுத்து நவீன இலக்கியங்களின் பெயர்களை ஒப்பித்தார்.  எனது கவிதைகளையும் வார்த்தை தவறாமல் கூறினார்.


அதைத் தொடர்ந்து நான் கூறுவதை எழுது எனக் கூறினேன். அவரது கையெழுத்தைப் பார்த்து நான் மிகவும் வியந்துபோனேன். முத்து கோர்த்தது போல் அவருடைய கையெழுத்து இருந்தது. அச்சடித்து வார்த்தைப் போன்ற ஒற்றுப்பிழை இல்லாத இலக்கணப் பிழை  வாக்கியங்களைப் பார்த்து என்னுடன் கொஞ்ச காலம் இரு எனக் கூறினேன். 


எங்கள் ஊர் பையன்:


அதன் பிறகு அந்த நேரத்தில் பாடல்கள் சொல்வேன் அவர் எழுதுவார். கல்கியில் சிகரங்கள் நோக்கி என்ற தொடர் எழுதிக்கொண்டு இருந்தேன். தொடரின் சில அத்தியாயங்களை நான் சொல்ல சொல்ல அவர் எழுதுவார். நான் சொல்லச் சொல்ல அவர் முகத்தில் வரும் புன்னகையை, பரவசத்தை, ஆச்சரியத்தை பார்த்து, வரிகளின் சிறப்பை உணர்ந்து கொண்டு மேலே பயணப்படுவேன். நீங்கள் தான் எங்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றார். அவர் எங்கள் ஊர் பையன்.


வருச நாடு அவர் பிறந்த ஊர். மலைக்கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அடக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வெளிவந்த ஒருவர். பாறைகளுக்கு கீழே ஒரு விதை விழுந்து விட்டது, அந்த பாறைகளை மீறி அது முளைத்துவிட்டது என்பது மாரி முத்துவுக்கும் பொருந்தும். நான் எனது கையால் தாலி எடுத்துக் கொடுத்து, மாலை எடுத்துக்கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். மங்கள பூக்கள் அவர் மீது இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த நான் இன்று சவப்பெட்டியில் அவருக்கு விழும் இறுதிப் பூக்களை பார்க்கும்போது மனது நடுங்கிறது. எனது கவிதையின் பிரச்சார பீரங்கி மாரிமுத்து. தமிழ் சினிமாவில் எனது கவிதையின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் என்றால் அது மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மாரிமுத்துவும்தான். 




உறவுகளின் மரணம்:


மாரி முத்துவின் மரணம் என்பது ஒரு கலைஞனின் மரணம் மட்டுமல்ல, ஒரு நடிகரின் மரணம் என்பதைவிட எனது உறவுகளின் மரணம் என்பதுதான் சரி. சற்றும் எதிர்பாராத செய்தி. ஜெண்டில்மேன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணியுடன் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். இந்த செய்தி கேட்டதும் எழுதிக்கொண்டு இருந்த பேனா நின்று விட்டது.


நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு இருந்த எனது உடல் நாற்காலியில் சரிந்துவிட்டேன். 56 வயது என்பது மரணிக்கும் வயது அல்ல. அதுவும் வாழ்க்கையில் வறுமையின் பள்ளத்தில் இருந்து செல்வத்தின் சிகரத்தினை நோக்கி சென்றுகொண்டு இருக்கையில் மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. கருணை இல்லாத மரணத்தின் குற்றம் என நான் நினைக்கிறேன். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை."


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.