தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி. தனது தனித்துமான குரலால் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது திருமண முறிவு குறித்தும் அவர் சந்தித்த பல இன்னல்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். 


 


வைக்கம் விஜயலக்ஷ்மி அறிமுகம் :


நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'செல்லுலாய்டு' திரைப்படத்தில் வந்த 'கட்டே கட்டே...' பாடல் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் இவர். 


தமிழில் வைக்கம் விஜயலக்ஷ்மி அறிமுகமானது 'குக்கூ' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கோடையில மழை போல...' எனும் பாடல் மூலம் என்றாலும், அவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இமான் இசையில் வெளியான 'வீர சிவாஜி' திரைப்படத்தில் இடம்பெற்ற ' சொப்பன சுந்தரி நான் தானே...' பாடல் மூலமே. அது மட்டுமின்றி கனா, ரோமியோ ஜூலியட், என்னமோ ஏதோ, தெறி, பாகுபலி மற்றும் பல திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 


 



கணவருடன் வைக்கம் விஜயலக்ஷ்மி


 


கசப்பான திருமண வாழ்க்கை :


மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு 2016ம் ஆண்டு பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வந்த சந்தோஷ் என்பருடன் நிச்சயம் நடைபெற்றது. இருப்பினும் சந்தோஷின் ஏராளமான நிபந்தனைகளுக்கு உடன்படாத விஜயலக்ஷ்மி அந்த திருமணத்தை நிறுத்திவிட்டாராம். இந்த துணிச்சல் பெண்மணிக்கு 2018ம் ஆண்டு அனூப் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இன்டீரியர் டெக்கரேட்டர் மற்றும் மிமிக்கரி ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வந்த அனூப் திருமணத்திற்கு பிறகு தனது உண்மையான முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக காட்ட துவங்கியுள்ளார். திருமணம் நடந்த கொஞ்ச நாட்களில் இருந்தே இருவருக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லாமல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. கடைசியில் இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 


 


வெளிப்படையாக உடைத்த விஜயலக்ஷ்மி:


வைக்கம் விஜயலக்ஷ்மியின் விவாகரத்து குறித்த முழுமையான காரணம் தெரியாமல் பல வதந்திகள் பரவி வந்தன. அதற்கான விளக்கமும் விஜயலக்ஷ்மி கொடுக்க விரும்பாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தான் நடிகை கௌதமி தொகுத்து வழங்கும் 'மனிதி வா' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் வைக்கம் விஜயலக்ஷ்மி. தனது திருமண வாழ்க்கை குறித்த கசப்பான அனுபவத்தை விஜயலக்ஷ்மி அங்கு தான் வெளிப்படையாக முதல் முறையாக பகிர்ந்துள்ளார். 


 


 






சேடிஸ்டுடன் வாழ முடியாது :


திருமணம் வாழ்க்கை குறித்து விஜயலக்ஷ்மி கூறுகையில் "என் கணவர் ஒரு சாடிஸ்ட் என்பதை திருமணம் முடிந்து கொஞ்ச நாட்களில் தெரிந்து கொண்டேன். எனக்கு இருக்கும் குறைகளை அடிக்கடி சுட்டிக்காட்டி துன்புறுத்தினார். எனது வயதான பெற்றோருக்கு உதவி செய்யக்கூடாது என நிபந்தனை விதித்தார். என்னுடைய கேரியரிலும் பல கண்டிஷன் போட்டார்.


அவரின் தொல்லையை அதற்கு மேலும் சகித்து கொள்ள முடியாமல் விவாகரத்து பெற்றேன். பாடுவது தான் என்னுடைய சந்தோஷம். என்னுடைய கேரியருக்கு தான் நான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். அதற்கு இடையூறு செய்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. பாடல்கள் இன்றி என் வாழ்க்கையை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. பல்வலி என்றால் பொறுத்து கொள்ளலாம் ஆனால் அதுவே சொத்தை பல்லாக இருந்தால் அதை அகற்றித்தானே ஆகவேண்டும் என அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி.